ராகுல், முதல்வர் அதிஷி மலரஞ்சலி
புதுடெல்லி,அக்.2–
இன்று மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
தேசத்தந்தை மகாத்மா காந்தி அவரின் பிறந்த நாள் ‘காந்தி ஜெயந்தி’ இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, டெல்லி முதல்வர் அதிஷி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
லால் பகதூர் பிறந்தநாள்
இதேபோன்று நாட்டின் 2வது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்திலும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘‘மதிப்பிற்குரிய மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினேன். மேலும் இதே நாளில் பிறந்த நாட்டின் 2வது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் மரியாதை செலுத்தினேன். தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் காந்தி, உண்மை மற்றும் அகிம்சை கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றி, உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர்களின் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கின்றது. மேலும் அவரது வாழ்க்கை, உண்மை, நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான கொள்கைகள் நாட்டு மக்களுக்கு எப்போதும் ஊக்கம் அளிக்கின்றது’’ என்று தெரிவித்தார்.
மேலும் “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என்ற முழக்கத்தை எழுப்பிய லால் பகதூர் சாஸ்திரி தனது வாழ்க்கையை நாட்டின் வீரர்கள், விவசாயிகளுக்காக அர்ப்பணித்தவர், அவரது எளிமை மற்றும் நேர்மை அவருக்கு பெரும் மரியாதையைப் பெற்று தந்தது. அவரது நற்பண்புகள் மற்றும் கொள்கை அடிப்படையிலான அவரது வாழ்க்கை, மக்களுக்கு சேவை செய்யவும், நாட்டிற்காக அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றவும் நம்மை ஊக்குவிக்கின்றது எனவும் அதில் மோடி கூறியுள்ளார்.