செய்திகள்

15-ந் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை: நெல்லை கூட்டத்தில் பேசுகிறார்

பா.ஜ.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரம்

சென்னை, ஏப்.12-

பிரதமர் மோடி 15-ந்தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். நெல்லையில் நடக்க உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் திருவிழா முதல்கட்டமாக தமிழகத்தில் இருந்தே தொடங்குகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், தமிழகத்தில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தொடர்ச்சியாக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் கடந்த 9-ந்தேதி சென்னை தியாகராய நகர் பாண்டி பஜார் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனப் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று பாரதீய ஜனதா வேட்பாளர்கள் தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), பால்கனகராஜ் (வடசென்னை) ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

இந்த வாகனப் பேரணியின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் வேலூரில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அதேநாளில், மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு திரட்டினார்.

இதற்கிடையே பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி தமிழகத்துக்கு மீண்டும் வருகிறார்.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு, 15–-ந் தேதி மாலை 6.15 மணிக்கு பிரதமர் மோடி நெல்லை வருகிறார். ஏற்கனவே, கடந்த 3 மாதங்களில் 8 முறை பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்துள்ளார்.

குண்டுகள் துளைக்காத

காரில் புறப்பட்டு…

விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். ராணுவ ஹெலிகாப்டரில் வரும் பிரதமர், அகஸ்தியர்பட்டி தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள ஹெலிபேடு தளத்தில் தரையிறங்குகிறார். அங்கிருந்து குண்டுகள் துளைக்காத காரில் புறப்பட்டு பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார். வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (நெல்லை), ஜான் பாண்டியன் (தென்காசி), பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி) உள்ளிட்டவர்களை ஆதரித்து பிரதமர் பேசுகிறார்.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பிரதமரின் தனி பாதுகாப்பு அதிகாரிகளும் நெல்லைக்கு வர உள்ளனர். முன்னதாக நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுதினமும் பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, அந்த பயண திட்டம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *