போஸ்டர் செய்தி

15 தொழில் நிறுவனங்களில் ரூ.12 ஆயிரத்து 100 கோடி முதலீடு: எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

சென்னை, அக். 11–

இந்த ஆண்டு 15 சென்னை தொழில் நிறுவனங்கள், 1.6 பில்லியன் டாலர் (ரூ.12 ஆயிரத்து 100 கோடி) தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

சீமன்ஸ் மற்றும் டிசைன் டெக் லிமிடெட் ஆகிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து 546 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு மையங்கள் வாயிலாக, தமிழ்நாட்டில் தொழில் நுட்பக் கல்வி உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல், தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் திறன்களை மாணாக்கர்களிடையே மேம்படுத்துதல், வேலை வாய்ப்பு பெறும் வகையில், திறனை அதிகரிக்கச் செய்தல், தொழிற்சாலைகளின் தற்கால எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு திறனை மேம்படுத்துதல் ஆகிய முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இத்திட்டத்தின் மூலம் பட்டய மற்றும் பட்ட வகுப்புகளில் பயின்று வரும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, அவர்கள் எளிதாக வேலை வாய்ப்பு பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் தொழிலகங்களிலிருந்து கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு அவர்களது தொழில் திறனை மெருகூட்ட இப்பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்திய ‘கனெக்ட்–2018’ மாநாட்டின் நிறைவு விழா சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் நேற்று நடைபெற்றது. விழாவில் இந்திய தொழில் கூட்டமைப்பு தென்மண்டல துணை தலைவர் சஞ்சய் ஜெயவர்தனவேலு வரவேற்புரையாற்றினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார்.

இதில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், இரா.காமராஜ், டாக்டர் எம்.மணிகண்டன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முதலாவது தலைமை செயல் அதிகாரி எப்.சி.கோலி, இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டின் தலைவர் கிருஷ்ணகுமார் நடராஜன், தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் சந்தோஷ் பாபு, இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநில கவுன்சில் தலைவர் எம்.பொன்னுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில், ‘தமிழ்நாட்டின் மின் ஆளுமை’ என்ற புத்தகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதைத்தொடர்ந்து உணவு பொருள் வழங்கல் துறையில் மின் ஆளுமை திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தியதற்காக உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு மின் ஆளுமை விருதினையும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முதலாவது தலைமை செயல் அதிகாரி எப்.சி.கோலிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அம்மா 2001–ல் கனெக்ட்டின் முதற்பதிப்பை தொடங்கி வைத்தார். மேலும் 2002, 2005 மற்றும் 2011ம் ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் அம்மா கலந்து கொண்டுள்ளார்.

அம்மாவின் அரசும், இந்திய தொழிலகக் கூட்டமைப்பும் (சிஐஐ) இணைந்து

இந்த ஆண்டு நடத்துகின்ற இந்நிகழ்வில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த ஆண்டு இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட மூன்றாவது தென்மண்டல மாநாட்டில் கலந்து கொண்டதை நான் இங்கே நினைவு கூர விரும்புகிறேன்.

2015ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடைபெற சிஐஐ பேருதவியாக இருந்தது.

அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு

அதே போன்று, வரும் 2019 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கும், தமிழ்நாடு அரசுக்கு பேருதவியாக இருக்க வேண்டுமென்று சிஐஐ செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

டிஜிட்டல் பொருளாதாரம் என்பது, தற்பொழுது தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய புரட்சி. இதன் மூலம் மூன்றாவது தொழில் புரட்சி ஏற்படும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். வருங்காலத்தில் மனிதனின் தினசரி நடவடிக்கைகளும், செயல்பாடுகளும், டிஜிட்டல் முறையைச் சார்ந்தே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதனால் இத்துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகி நாட்டின்

பொருளாதார நிலை மேம்படும். உலகம் முழுவதும் பரவி வரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியானது, சமமான வளர்ச்சியை தூண்டுவதற்கும், புதிய கருவிகள், நடைமுறைகள், வளங்கள், சேவைகள், தயாரிப்புகள், திறன் மற்றும் சமீபத்திய தொழில் நுட்பங்களை சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் அடைய வழிவகுக்கிறது.

ஜிடிபி–7.93%

இதன்மூலம் அதிக வேலை வாய்ப்பு உருவாக்குதல், மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், குடிமக்களுக்கு விரைவான சேவைகளை வழங்குதல், நேரத்தையும், ஆற்றலையும் சேமித்து, மக்களின் வாழ்க்கையை மிகவும் எளியதாக்குதல் போன்றவற்றை தகவல் தொழில்நுட்பம் பெரிய அளவில் மாற்றியுள்ளது. மாநிலத்தின் மொத்த ஜிடிபி (2017ம் ஆண்டில்), தகவல் தொழில்நுட்பவியல் உள்ளடக்கிய சேவை துறையின் பங்களிப்பு, 7.93 சதவீதமாக உள்ளது.

தற்காலத் தகவல் தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணங்களான மேகக் கணினியம், இயந்திரக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில் நுட்பம், முப்பரிமான அச்சிடுதல், மருத்துவத் தொழில் நுட்பம், வேளாண் தொழில் நுட்பம், பல்பொருள் இணையம், மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, அனிமேஷன் மற்றும் விளையாட்டு தரவு பகுப்பாய்வு, வணிக நுண்ணறிவு மென்பொருள், தரவு கிடங்கு மற்றும் தமிழகத்தில் முதலீடுகள் சார்ந்த தரவு மையங்கள் வங்கி மற்றும் வணிக சேவைகளில் தகவல் தொழில்நுட்பவியல் பயன்பாடுகள் போன்றவை அம்மாவின் அரசால் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை இன்று இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப தலைநகரம் என்று கூறுகின்ற வகையில் பல புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.

மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளை சென்னையில் திறந்துள்ளன. மற்ற நிறுவனங்களும் சென்னையில் தொடங்க விரும்புகின்றன.

நவீன தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றுகின்ற அளவிற்கு மனிதவள ஆற்றல் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணாக்கர்கள் பொறியியல் கல்லூரிகளில் தங்களது கல்வியினை முடித்து விட்டு திறமைமிக்க பொறியாளர்களாக வெளி வருகின்றனர்.

அவ்வாறு படிப்பை முடித்து வெளிவரும் பொறியாளர்கள், வெளிநாட்டில் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் வகையில், அவர்களது செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்பது அம்மாவின் அரசின் விருப்பமாகும். அதனை நிறைவேற்றும் பொருட்டு, பொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு மேம்படுத்துதல் கலந்தாய்வு கூட்டம் ஒன்று என்னால் 10.9.2018 அன்று நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வின் போது மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் வளர்ச்சிக்காக அம்மாவின் அரசு தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கை–2018ஐ வெளியிட்டது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் எம்.ஐ.டி. வளாகத்தில் திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி மையமும், ஐந்து பொறியியல் மற்றும் பலவகைத் தொழில் நுட்பக் கல்லூரிகளில், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும் அம்மாவின் அரசால் நிறுவப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 2017–18ம் ஆண்டு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 179 கோடி ரூபாயாக இருக்கும் எனவும், மென்பொருள் வல்லுநர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 38 ஆயிரமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது அளிக்கப்பட்டு வரும் திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியும், திறன் வாய்ந்த மென்பொருள் வல்லுநர்களின் எண்ணிக்கையும் பல மடங்கும் பெருகும்.

தமிழ்நாடு மின்னணு நிறுவனம், சென்னையிலுள்ள டைடல் பார்க்கில் 90 இருக்கைகள் வசதி கொண்ட தொழில் முனைவோர் மையத்தை அமைத்துள்ளது. 50 இருக்கைகள் வசதி கொண்ட ஒரு தொழில் முனைவோர் மையம் கோயம்புத்தூரில் நிறுவப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு இந்திய அரசின் தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலையமைப்பு மற்றும் தமிழ்நாடு மாநில தரவு மையம் போன்ற திட்டங்கள் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.

திறந்த நிலை தரவுதளம்

அரசின் சேவைகளை இணையதளம் வாயிலாக தங்கள் வீட்டில் இருந்தபடியே எளிதில் பெற ஏதுவாக, பொது மக்களுக்கான திறந்த நிலை தரவு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் எந்த பகுதியிலிருந்தும், எந்நாளும், எப்போதும் சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்க இயலும்.

அனைவருக்கும் வளர்ச்சி என்ற எண்ணத்தை ஈடேற்ற, அரசின் அனைத்து சேவைகளையும் கிராம மக்கள் அடையும் வண்ணம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பாரத்நெட் – கிராம ஊராட்சிகளுக்கான இணைய சேவைத் திட்டம் என்ற பெயரில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்த உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனை செயல்படுத்த கண்ணாடி இழை வலையமைப்பை தமிழ்நாட்டில் உருவாக்கி செயல்படுத்தி, சுயமாக பராமரிக்க தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் எனும் ஒரு நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

8 சிறப்பு பொருளாதார மண்டலங்கள்

தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் ஓசூரில் 8 தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியலைச் சார்ந்த சேவைகளுக்கான சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கியுள்ளது.

அம்மா இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு வியாபார குறியீடாக ‘எல்கோசெஸ்’ என பெயரிட்டார். இவை, தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் அதைச் சார்ந்த சேவைகளுக்கான முதலீடுகளை ஈர்க்கும் ஒரு சிறந்த இடமாக உருவாகியுள்ளது.

இந்த மண்டலத்தில் பல நிறுவனங்களுக்கு நிலம் குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 75,000 நபர்களுக்கு மேல் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அதிக அளவில் மக்கள் கூடும் 50 இடங்களில் 8 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அம்மா வை–பை மண்டலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக, 5 இடங்களில் அம்மா வை–பை மண்டல சேவை என்னால் 5.4.2018 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட, ஏற்கனவே உள்ள உகந்த சூழ்நிலையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஒப்புதல் மற்றும் உரிமங்கள் ஆகியவற்றை ஒரே விண்ணப்பத்தின் மூலம் ஆன்லைனில் பெறுவதற்கு ‘‘ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றைச்சாளர தகவு” ஒன்று அம்மாவின் அரசால் துவக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 11 அரசுத் துறைகளிலிருந்து தேவையான பல்வேறு அனுமதிகள் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய சேவைகளை தொழில் நிறுவனங்கள் எளிதாகப் பெற இயலும்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க வரும் ஜனவரி மாதம் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாடு நடைபெறுவதன் மூலம் பல சர்வதேச நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்ய முன் வருவார்கள் என உறுதியாக நம்புகிறேன். இதன்மூலம் தமிழ்நாட்டில் தொழில் வளம் மேலும் பெருகும் என்பது உறுதி.

அமைதி, வளம், வளர்ச்சி

அம்மாவின் தாரக மந்திரமான ‘‘அமைதி, வளம், வளர்ச்சி” என்ற கொள்கையை அம்மாவின் அரசு பின்பற்றி வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்கு பராமரிக்கப்படுவதன் மூலம் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. இதன் மூலம் அனைத்து துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியினை கண்டு, முதலீட்டுக்கு தேவையான உகந்த சூழல், தமிழ்நாட்டில் திகழ்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியினை அடுத்த கட்டத்திற்குச் கொண்டு செல்லும் வகையில், அம்மா வகுத்து தந்த ‘‘தொலைநோக்கு பார்வை 2023″ என்ற திட்டம் பல்வேறு துறைகளில், நமது மாநிலம் எய்த வேண்டிய இலக்குகளையும், செயல்படுத்த வேண்டிய திட்டங்களையும் மிகத் துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை நோக்கி அம்மாவின் அரசு வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. மாணாக்கர்களின் தகவல் தொழில் நுட்ப அறிவினை அதிகரிக்கச் செய்ய விலையில்லா மடிக்கணினிகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 38 லட்சத்து 53 ஆயிரத்து 592 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 15 லட்சத்து 66 ஆயிரத்து 22 மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.

இதனால் மனித ஆற்றலும், இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மேலும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் பணியமர்த்தப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முறையே 16 மற்றும் 16.24 சதவீத பங்களிப்புடன் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அன்னிய நேரடி முதலீடு பற்றிய ரிசர்வ் வங்கியின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

56 சதவீதம் கூடுதல் முதலீடு

அதில் தமிழ்நாட்டில் 2017–18ம் ஆண்டு 56 சதவீதம் கூடுதல் முதலீடு பெறப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆய்வு நிறுவனம் 21 மாநிலங்களில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் 2018ம் ஆண்டில் தொழில் முதலீட்டிற்கு சிறந்த மாநிலமாக டெல்லிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு 15 சென்னை தொழில் நிறுவனங்கள், 1.6 பில்லியன் டாலர் (ரூ.12 ஆயிரத்து 100 கோடி) தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது எனவும், இது சென்ற வருட முதலீடுகளை காட்டிலும் மிக அதிகம் எனவும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு பத்திரிகை செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் சேவை நிறுவனங்கள் மட்டும் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடுகளை ஈர்த்துள்ளது.

ஆளுமையில் தமிழகம் 2–வது இடம்

பெங்களூருவைச் சேர்ந்த பொது விவகாரங்கள் மையம், இந்தியாவிலேயே ஆளுமையில் இரண்டாவது சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு திறமையான மற்றும் வலிமையான ஆட்சி நடைபெறுவதால்தான் இத்தகைய சாதனைகளை செய்ய இயல்கிறது என்பதை இங்கே அழுத்தமாக குறிப்பிட விரும்புகிறேன்.

எனவே, தொழில் துறையில் மட்டுமின்றி, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை ஒரு முன்னோடி மாநிலமாக திகழச் செய்ய வேண்டுமென்ற அம்மாவின் சீரிய கொள்கையின்படி இந்த அரசு தொடர்ந்து செயல்படும் எனக் கூறிக்கொள்கிறேன். அம்மா நல்லாசியுடன் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் பொருட்டு தொழில் புரட்சியை ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் நான் எடுத்து வருகிறேன். தொழில் துவங்க என்னை சந்திக்க வருபவர்கள் உடனடியாக சந்தித்து அவர்களுடைய கோரிக்கையை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நிறைவேற்றி வருகின்றேன். இச்சமயத்தில், உங்களுடன் ஒரு தகவலை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொள்ள விரும்புகின்றேன்.

ஆற்று மணலுக்கு மாறாக வெளிநாட்டிலிருந்து மணலை இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் என்று அறிவித்து நான் எடுத்த நடவடிக்கையின் மூலமாக, இன்றையதினம் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் முதல் கப்பல் வந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து, தற்போது மணல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பல சோதனைகளைக் கடந்து வெற்றிகரமாக இன்று இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இல்லம் தேடி வரும் திட்டத்தின் மூலம், மணல் அவரவர் தேவைக்கேற்ப வீட்டிற்கு சப்ளை செய்யப்படும்.

தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு வசதியாக, துறைமுகத்திற்கான அணுகு சாலை வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது, வேண்டிய அளவு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கான பல வசதிகளை நான் உங்களுக்கு செய்வதற்கு தயாராக உள்ளேன். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு வேண்டுமென்று இந்தத் தருணத்தில் கேட்டுக் கொள்கின்றேன். இங்கு வைத்துள்ள பல கோரிக்கைகளை நான் கனிவுடன் பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுப்பேன் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சேர்மனுக்கு பாராட்டு

இத்தருணத்தில் சேர்மன் பொன்னுசாமியை மனதார பாராட்ட விழைகின்றேன். ஏனென்றால், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதற்கு அவர் உறுதுணையாக விளங்கினார். என்னை பலமுறை சந்தித்து நீங்கள் அவசியம் வந்து இந்த நிகழ்ச்சியிலே பங்கு பெறவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவருடைய வேண்டுகோளையும் ஏற்று உங்களை சந்திப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தற்கு அவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த இனிய விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, எனது மிகச் சிறந்த நிகழ்ச்சியாக இதை கருதுகின்றேன். ஏனென்றால், இங்கே வருகை தந்திருக்கின்ற அத்தனை பேரும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குகின்ற நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கின்றேன். ஏனென்றால், இன்றைக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் தமிழகத்திலே படித்து வேலையில்லாமல் இருக்கின்ற சூழலிலே, அப்படிப்பட்ட மாணவர்களுடைய திறமைகளையும், நம்முடைய தமிழ்நாட்டில் படிக்கின்ற மாணவர்கள் திறமை மிக்க மாணவர்கள், அப்படி திறமை மிக்க மாணவர்கள் உங்கள் மூலமாக அவர்களுக்கு பணி கிடைப்பது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கின்றது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *