செய்திகள்

15 ஆண்டில் 41 கோடி இந்தியர்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டனர்

ஐநா அறிக்கையில் தகவல்

நியூயார்க், ஜூலை 13–

கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 41 கோடியே 50 லட்சம் இந்தியர்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள்தொகை தினம் நேற்று முன்தினம் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், பல பரிமாண ஏழ்மை குறியீட்டு அறிக்கையை ஐ.நா.வின் வளா்ச்சித் திட்ட (யுஎன்டிபி) அமைப்பும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஏழ்மை-மனித மேம்பாடு அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளன. உலக நாடுகளில் கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களில் காணப்படும் ஏழ்மை நிலை குறித்த விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

41 கோடி பேர் மேம்பாடு

முக்கியமாக, உலகில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாக உருவெடுத்துள்ள இந்தியா, கடந்த 2005-06 முதல் 2019-21 வரையிலான காலகட்டத்தில் சுமார் 41.5 கோடி பேரை ஏழ்மை நிலையில் இருந்து விடுவித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா உள்பட 25 நாடுகளில் ஏழ்மை நிலையில் வாழும் மக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக அளவில் ஏழ்மையை ஒழிப்பது சாத்தியமே எனத் தெரிவித்துள்ள அந்த அறிக்கை, கொரோனா காலத்தில் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டவா்கள் குறித்த விவரங்கள் முழுமையாகத் தெரிய வராததால் ஏழ்மை ஒழிப்பு நடவடிக்கை சற்று பின்னடைவைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு 110 நாடுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. உலக மக்கள் தொகையில் ஏழைகளின் எண்ணிக்கை சுமார் 110 கோடி (18 சதவீதம்) என்றும் இதில் பாதி பேர் (53.4 கோடி) சஹாராவைச் சேராத ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான ஏழைகள் (38.9 கோடி) வசிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *