செய்திகள்

15ந் தேதி சென்னையில் தமிழியக்கம் தொடக்கம்: தலைவர் டாக்டர் ஜி.விசுவநாதன் தகவல்

வேலூர், அக் 11–

உலக முழுவதும் உள்ள தமிழர் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான தமிழியக்கம் என்ற அமைப்பு துவக்கப்படுகிறது. இம்மாதம் 15ந் தேதி சென்னையில் நடைபெறும் தமிழியக்க விழாவில் மொரிசீயஸ் நாட்டு ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி, கயானா நாட்டின் பிரதமர் மோசசு வீராசாமி நாகமுத்து, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வை.கோ., வீரமணி உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளதாக தமிழியக்க நிறுவன தலைவரும் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஜி.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக சென்னையில் உள்ள பத்திகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.விசுவநாதன் கூறியதாவது:–

‘100 ஆண்டுகளுக்கு முன்பாக மறைமலையடிகள் தலைமையில் தமிழ்மொழி இயக்கம் தொடங்கப்பட்டது. 100 ஆண்டுகள் கழித்து சாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் உள்ள தமிழர்களையும், தமிழ் அமைப்புகளையும் ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வரும் வகையில் இந்த தமிழியக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் ஐரோப்பா யூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல் கலாம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கவிஞர் கலியன் பூங்குன்றனார் பாடலை குறிப்பிட்டு உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று என்று உலகமயமாக்கள் பற்றி 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழக் கவிஞர் கனியன் பூங்குன்றன் எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டார்.

நமது தாய் மொழியான தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை தமிழ் மக்கள் அறியாமல் உள்ளனர். உலகில் மூத்த மொழிகளாக 7 மொழிகள் உள்ளன. அதில் ஐரோப்பாவில் கிரேக்கமும் லத்தினும், மேற்கு ஆசியாவில் பாரசீகம் இபரு, இந்தியாவில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம், சீனாவின் சீன மொழிகளாகும். இவற்றில் பல மொழிகள் எழுத்து வடிவிலும் பேச்சு வடிவிலும் மாறிவிட்டன. மாறமல் இன்றும் வழக்கத்தில் இருப்பது தமிழ் மொழியும் சீன மொழி மட்டுமே. இவற்றில் மூத்த மொழி தமிழ் மொழியாகும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியில் இலக்கணம் இலக்கியம் உருவாகியது. தொல்காப்பியம் என்ற தமிழ் நூல் இலக்கண வடிவில் எழுதப்பட்டது.

தமிழர்கள் மறந்து விடுவார்களோ அச்ச நிலையில்…

அப்படிப்பட்ட தமிழ் மொழியினை தமிழர்கள் மறந்து விடுவார்களோ என்ற நிலை உருவாகியுள்ளது. படித்தவர்களே ஆங்கிலம் கலக்காமல் தமிழ் மொழியில் பேசாத நிலை உள்ளது. முன்பெல்லாம் ஒருவர் பேசும் மொழியை வைத்தே அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை அறிய முடியும். ஆனால் தமிழரை அப்படி கண்டுபிடிக்க முடியவில்லை. வேறுமொழிக்கு நாம் விரோதிகள் அல்ல. மக்களிடையே, மாணவர்களிடையே, ஒவ்வொரு குடும்பத்தினரிடையே இந்த இயக்கம் சென்று சேரவேண்டும். பள்ளி, கல்லூரிகளில் தமிழை ஒரு பாடமாக வைக்க வேண்டும். நமது தமிழ் மொழியை பாதுகாக்கவும் தமிழை பரப்பவும் தொடங்கப்பட்டது தான் இந்த தமிழியக்கம். இந்த பணியில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களும் ஈடுபட்டுள்ளனர்.

தமிழியக்கம் தொடக்க விழா வருகிற 15 ந்தேதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள ராசா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறுகிறது. என் தலைமையில் (தமிழியக்க நிறுவன தலைவர் மற்றும் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன்) நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மொரிசீயஸ் நாட்டின் ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி, கயானா நாட்டின் பிரதமர் மோசசு வீராசாமி நாகமுத்து, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.

மூத்த தமிழ் அறிஞர்களுக்கு பாராட்டு விழா

அதனை தொடர்ந்து நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக தமிழகத்தில் உள்ள மூத்த தமிழ் அறிஞர்களுக்கு பாராட்டு விழாவும், அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை உள்ள நாடுகளில் வெளிநாட்டு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மற்றொரு நிகழ்வாக ஊடகம் அரங்கில் செய்தித்தாள், தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியவற்றில் தமிழ்மொழி கையாளுவது பற்றி பேசப்பட உள்ளது. மேலும் 1967ம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா சென்னை மாநிலம் என்றிருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி 50 ஆண்டுகள் ஆகிறது. இதை போற்றும் வகையில் பாராட்டு பொன் விழா நடைபெறுகிறது.

இறுதியாக நடைபெறும் நிறைவு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன், கி.வீரமணி, மதிமுக பொது செயலாளர் வை.கோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நிர்வாகிகள் பங்கேற்று பேசுகின்றனர். தமிழியக்க தொடக்க விழாவில் கல்வியாளர்கள், திரைப்படத் துறையினர், எழுத்தாளர்கள், கவிஞர்கள், புலவர்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழியக்க பொதுச் செயலாளர் கவிஞர் அப்துல் காதர், செயலாளர் மு.சுகுமார், பெருளாளர் புலவர் வே.பதுமனார், துணைச் செயலாளர் சாரதா நம்பி ஆருரான் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *