செய்திகள் போஸ்டர் செய்தி

144 தடை உத்தரவு: காஞ்சீபுரம் நகரம் வெறிச்சோடியது

Spread the love

காஞ்சீபுரம், மார்ச் 25–-

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையொட்டி, 144 தடை உத்தரவு நேற்று மாலை முதல் அமலுக்கு வந்தது. அதையொட்டி காஞ்சீபுரம் நகரத்தில் உள்ள பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் முக்கிய வீதிகளான காஞ்சீபுரம் காந்திரோடு, காமராஜர் சாலை, பஸ் நிலையம், மேட்டு தெரு, 4 ராஜ வீதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும், கடைகள் மூடப்பட்டு, மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழக அரசுக்கு காஞ்சீபுரம் மக்கள் முழு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், காஞ்சீபுரம் நகரில் சில இடங்களில், 5 பேர், 6 பேர் கூடி நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் அழைத்து, தடை உத்தரவு பற்றி அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், 3 மணிக்கெல்லாம் நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் சிலர் ஆட்டோ, கார்களை பிடித்து அருகில் உள்ள நகருக்கும், கிராமங்களுக்கும் சென்றனர்.

அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் மூடல்

இன்று காஞ்சீபுரம் நகரில் அத்தியாவசிய கடைகளான மளிகை கடை, பால் கடை, மார்க்கெட் பகுதியில் காய்கறி கடைகள், மருந்தகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளது. மற்ற வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.

காஞ்சீபுரம் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களுக்கு கிருமி நாசினி மருந்து கைகளில் தெளிக்கப்பட்ட பின்பு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

மார்க்கெட் பகுதி முழுவதும் நகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றனர். மேலும் மார்க்கெட் பகுதியில் வரும் பொதுமக்களை ஒருவர் பின் ஒருவராக உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் வாயில் முகப்பில் நகராட்சி துறையினர் நின்று அவர்களின் கைகளில் கிருமி நாசினி ஸ்பிரே அடித்து உள்ளே அனுப்புகின்றனர். இதே போல் இறைச்சி கடைகளிலும் கிருமி நாசினி ஸ்பிரே அடிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

பெட்ரோட் பங்க் தடையின்றி இயங்கியது. வங்கிகளில் பணியாளர்கள் முககவசம் அணிந்து பணியை செய்தனர். காஞ்சீபுரம் பள்ளிகளில் பொது தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத செல்வதற்கு முன்பு சோப்பு மூலம் கைகளை சுத்தமாக கழுவி கொண்டு, கிருமி நாசினி மருந்து கைகளில் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்த பிறகு தேர்வு மையத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

காஞ்சீபுரம் பஸ் நிலையம், புதிய ரெயில் நிலையம், பழைய ரெயில் நிலையம், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. பஸ்நிலையத்தில் பஸ்சில் ஏறும், மற்றும் இறங்கும் பயணிகளின் கைகளில் கிருமி நாசினி ஸ்பிரே மருத்து அடிக்கப்பட்டது.

ஓமன் நாட்டில் இருந்து காஞ்சீபுரம் வந்த என்ஜினியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, பூரணமாக குணமடைந்தார். மேலும், அவர் வசித்து வந்த காஞ்சீபுரம் பள்ளிகூடத்தான் தெருவில் சுகாதாரத்துறையினர் தினமும் அந்த தெருக்களில் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். காஞ்சீபுரம் என்ஜினியர் பழகிய உறவினர்கள், நண்பர்கள் ஆக 22 பேரின் வீடுகளிலும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் வீட்டு அருகே கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.

மேலும் அம்மா உணவகங்கள் வழங்கம் போல் இயங்கியது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 77 நபர்களை தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *