செய்திகள்

142 பேரை பலி வாங்கிய குஜராத் பால விபத்து: ஒரே நாளில் 3165 டிக்கெட்டு விற்றது விசாரணை அறிக்கையில் தகவல்

காந்தி நகர், நவ. 23–

குஜராத் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்கு உள்ளான நாளன்று, 3,165 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட தகவல் தடயவியல் விசாரணையில் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றின் குறுக்கே, 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பாலத்தில் இருந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆற்றுக்குள் மூழ்கினர். இதில் 142 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த விபத்து தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கட்டுமான பணியில் துளியும் அனுபவம் இல்லாத, கடிகார நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்தது உள்பட, மோர்பி தொங்கு பால விபத்து தொடர்பாக, குஜராத் அரசு அமைத்த 5 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும், தடயவியல் துறையினரும் விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தி அறிக்கையை குஜராத் மாநில அரசிடம் தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையை, நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

அந்த விசாரணை அறிக்கையின் விவரம் வருமாறு:–

நிபுணத்துவம் இல்லை

மோர்பி பாலத்தை பராமரிக்கும் ஒரிவா என்ற தனியார் நிறுவனம் விபத்து நடந்த நாளில் 3,165 டிக்கெட்டுகளை விற்பனை செய்ய பாலத்தில் பணியாற்றும் டிக்கெட் வினியோகஸ்தரிடம் கொடுத்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தின் எடை தாங்கும் திறன் குறித்து ஒரிவா நிறுவனம் கணிக்கவில்லை.

தொங்கு பாலத்தின் கேபிள் கம்பிகள் துருபிடித்துள்ளது. பாலத்தை தாங்கும் கம்பிகள் அறுந்துள்ளன. பாலத்தை தாங்கும் கம்பிகளையும், கேபிள் கம்பிகளையும் இணைக்கும் பகுதியில் உள்ள ‘போல்ட்டுகள்’ காணவில்லை. ஒப்பந்ததாரரால் புதிதாக அமைக்கப்பட்ட கனமான தரைப்பகுதியின் எடையை பழைய கேபிள் கம்பிகளால் தாங்கும் திறன் இல்லை.

ஒரிவா நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட தொங்கு பாலத்தின் டிக்கெட் விற்பனையாளர், பாலத்தின் காவலாளிகள் என அனைவருமே தினக்கூலி தொழிலாளர்கள். கூட்ட நெரிசலை மேலாண்மை செய்வது குறித்து இவர்களுக்கு எந்தவித நிபுணத்துவமும் இல்லை.

தொங்கு பாலத்தின் மீது எவ்வளவு மக்களை அனுமதிக்கப்படவேண்டும், பாதுகாப்பு நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து காவலாளிகளுக்கு தெரியப்படுத்தவில்லை. விபத்து நடைபெறும் பட்சத்தில் மக்கள் உயிரை காப்பாற்ற உயிர் காப்பாளர்கள் அல்லது படகுகளை ஒரிவா நிறுவனம் வைக்கவில்லை. நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமலேயே தொங்கு பாலம் திறக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *