சினிமா செய்திகள்

‘மக்கள் என் பக்கம்’: `பிக்பாஸ்’ சேரன்!

Spread the love

எந்தவொரு நடிகரோ, நடிகையோ, இயக்குனரோ, தயாரிப்பாளரோ அல்லது கலைத் துறை சம்பந்தப்பட்ட பிரமுகரோ யார் வந்தாலும், அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று மலர்க் கொத்து கொடுத்து கௌரவிப்பது வடபழனியில் உள்ள பிரபல கமலா திரையரங்கத்தின் அதிபர் வி. என். சிதம்பரம் செட்டியாரின் வாடிக்கை. இதை, இந்நாளிலும் திரை அரங்கின் இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான சித. கணேஷ் கைக்கொண்டு தந்தை வழியில் நடந்து வருகிறார்.

தனியார் தொலைக்காட்சி வழங்கும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று கமலஹாசன் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி. இதில் பங்கேற்ற கலைஞர்களில் சேரனும் ஒருவர். குழந்தை குட்டி குடும்பம் நண்பர்கள் அலுவலகம் தொழிலை மறந்துவிட்டு பிரம்மாண்டமான வீட்டில் சகக் கலைஞர்களுடன் 100நாள் வாழ்க்கை. இங்கு 24 மணி நேரமும் நடப்பது என்ன என்பதை கண்காணித்து ருசிகரமாக சர்ச்சைக்குரியதாக சந்தோஷமாக ஒளிபரப்பி வரும் நிகழ்ச்சி, நேயர்கள் மத்தியில் தனிப்பெரும் வரவேற்பை பெற்று இருப்பது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 90 நாள் வெற்றிகரமாக இருந்துவிட்டு பல விதமான அனுபவங்களை சந்தித்து வெளியேறி இருக்கும் இயக்குனர் சேரன், கமலா தியேட்டரில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை படம் பார்க்க வந்தார். அவரை மலர்க்கொத்து கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்று பொன்னாடை போர்த்தினார் சித. கணேஷ். பின்னர் ராட்சச கேக்கை வெட்ட வைத்து அவருக்கு ஊட்டி மகிழ்ந்தார். ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நடந்த இந்த நிகழ்ச்சியை கண்டு சேரன் நெகிழ்ந்து போனார்.

மனிதநேயம்

‘‘தேசிய அளவில் விருது பெற்றவர் சேரன். குடும்பப் பாங்கான படங்களை எடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல சிந்தனையை விதைப்பவர். ஆரோக்கியமான சிந்தனையாளர். நல்ல மனிதர். மனிதநேயம் மிக்கவர். இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டி பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலும் அதில் ஆர்வத்தோடு பங்கேற்றார். 90 நாளும் நல்ல மனிதராக, மனிதநேயம் மிக்கவராக, நேயர்கள் மத்தியில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு தனிப்பெரும் வரவேற்பை சம்பாதித்து இருப்பவர்.

சினிமாவைத் தாண்டி பொது வாழ்க்கையிலும் மனித நேயத்துடன் தனி அங்கீகாரத்தை பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். அதனாலேயே அவர் எங்கள் திரையரங்கத்திற்கு வந்தபோது அவரை எங்கள் தந்தையின் வழியில் மலர்க் கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்று கௌரவித்து இருக்கிறோம். எங்கள் தந்தை இருந்தாலும் இதையே தான் செய்து இருப்பார்’’ என்று மகிழ்ச்சியோடு கூறினார் சித.கணேஷ். பிக் பாஸ் சேரனுக்கு ஒரு புது அனுபவம் 90 நாட்கள் குடும்பம் நண்பர்கள் இடையில் இருந்து பிரிந்து இருந்தார். சகக் கலைஞர்களுடன் பொதுச் சிறையில் அடைக்கப்பட்டது போல ஒரு பிரமை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை, ஒவ்வொரு அனுபவம், மனிதர்களில் இத்தனை நிறங்களா? என்று புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு கசப்பும் இனிப்பும் கலந்த புத்தம் புது அனுபவம். லட்சக்கணக்கில் பரிசுத் தொகையை அவர் பெற முடியாதது வருத்தம் என்றாலும் பல்லாயிரம் நேயர்களின் இதயத்தைத் தொட்டிருக்கிறார்.

நான்கு முகம்

நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் விநியோகஸ்தர் என்று நான்கு முகங்களைக் காட்டினாலும் கொஞ்சம், உயர் நிலையிலிருந்து தன்னை இறக்கிக் கொண்டு தொடக்கநிலை மனிதனாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டியது என் மனதை கவர்ந்தது. பாதித்தது. அவரின் மனித நேயம் மனசைத் தொட்டது அதற்காகவே இந்த விழா என்று குறிப்பிட்டார் சித. கணேஷ்.

சினிமா தியேட்டர் நடத்தி பணம் சம்பாதிக்கிறோம் என்றாலும் நல்ல கலைஞர்களை அங்கீகரித்து அவர்களை கௌரவிப்பது, சமூக நலத்திட்டங்களில் எங்களையும் பதிவுசெய்துகொள்வது எங்கள் தந்தை காட்டிய வழி. அதில் நாங்கள் நடை போட்டுக் கொண்டிருக்கிறோம். நல்லது செய்து கொண்டு இருக்கிறோம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சோதனை களையும், சங்கடங்களையும், சிரமங்களை யும், அவமானங்களையும் தாங்கி இருந்தாலும் இளையதலைமுறை இயக்குனர் பட்டாளம் அவருக்காக குரல் கொடுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியே வாருங்கள் என்று அன்புக் கட்டளை இட்டு சொன்னபோதும், இதுவும் கடந்து போகும் என்று பிடிவாதமாக இருந்து வெற்றிகரமாக முடித்துவிட்டு வெளி வந்திருக்கும் பெருமைக்குரிய கலைஞர் சேரன் என்று மனம் திறந்து பாராட்டினார் சித. கணேஷ்.

பிக்பாஸ்இரண்டு சீசன்களின் வெற்றியை அடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 16 போட்டியாளர்களில் ஒருவராக தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன் கலந்து கொண்டார்.

விஜய்சேதுபதி தூண்டில்

சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பார்வை யாளர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அவருக்கு பிக்பாஸ் வீட்டில் நடந்த சில பிரச்னைகளால் திரைத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். அதனால் அவரை வெளியே அழைத்துவர வேண்டும் என்று இயக்குநர் வசந்தபாலன் தலைமையில் ஒரு பட்டாளமே அறிவுறுத்தியது.

ஆனால் விஜய்சேதுபதி தான் தன்னை நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்ததாகவும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் சேரன் அப்போது கூறினார்.

பிக்பாஸ் வீட்டில் 91 நாட்கள் தங்கியிருந்த சேரனுக்கு பார்வையாளர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை அளித்தனர். ஒருகட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட சேரன் ரகசிய அறையில் தங்கவைக்கப்பட்டார். பின்னர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சேரன் கடந்த வார இறுதியில் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பார்வை யாளர்களுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிக்கையில், நான் தலைவணங்கி நிற்கிறேன்.எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின் பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி. நேர்மை, நற்பண்பு, உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி என்று அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *