சிறுகதை

14 வருடங்கள் (ராஜா செல்லமுத்து)

லட்சுமிக்கு தலையெல்லாம் ஆங்காங்கே நரை தட்டுப்பட்டது.
ஐந்து பெண் குழந்தைகளுக்குத் தாய் என்று அவளைப் பார்த்து யாரும் சொல்ல மாட்டார்கள்.
இளமைப்பிடிப்பு அவளைவிட்டு இன்னும் அகலாமலே இருந்தது. எண்ணைய்த் தீயில் எரிந்து கொண்டிருந்தாலும் அவள் வண்ணமும் வனப்பும் குறையவே இல்லை. ஆனால் அவளுக்குள் எரிந்து எரிந்து உருகும் உணர்ச்சி மெழுகுவர்த்தியை யாரும் உணர்ந்து கொள்ள நியாயமில்லை தான்.
அவள் படும் அவஸ்தையின் நீள அகலங்களை யாரும் அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாதபடிக்கு நெற்றி நிறைய குங்குமமும் முகம் நிறைய பவுடரும் பூசிய படியே பளபளவென இருப்பாள். வரிசைப் பற்களில் சிரிப்பு சிதறாமலே இருக்கும்.
அன்று இரவு ஒரு விழா முடித்து விட்டு நானும் தியாகராஜன் சாரும் விழா அரங்கை விட்டு வெளியே வந்தோம். ஏற்கனவே பெய்த மழையின் ஈரம் வீதி முழுவதும் உலராமலே இருந்தது.
“முத்து”
“மழ பெஞ்சுதா ”
“ஆமா சார்”
“நல்ல மழ போல. ஸ்கூட்டியெல்லாம் நனஞ்சு போயிருக்கு. மழ எப்ப வருது எப்படி வருதுன்னு யாருக்கும் தெரியாது போல” என்று சொல்லி அவராய் சிரித்துக் கொண்டார்.
“ஆமா சார் இது ஆடிமாதமில்ல; மழ எப்படி வரும்னு யாரும் கணிக்க முடியாது. அப்பப்ப வரும்; அப்பப்ப போகும் என்ற உண்மையை தூறல் துளிகளைப் போல் சொன்னான் முத்து.
மணி என்னாச்சு?”
“ஒன்பது முப்பது”
“ஒன்பதரையா”
“ஆமா சார்”
“சாப்பிட்டுட்டு போவமா? என்றார் தியாகராஜன் சார்,
” ஓ.கே சார்”
“எங்க சாப்பிடலாம் என்ற யோசனையில் தன் டூவிலரை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் பக்கம் முடுக்கினார். அவ்வப்போது தூறலும் சாரலும் எங்களை அழகாக நனைத்துவிட்டு நனைத்து விட்டுப் போயின. சில்லென்ற அந்த இளங்காற்றில் எங்கள் மீது ஈரம் பட்டதும் உடல் ஏதோ உருவத்திற்கு – உருவம் மாறியது போன்ற உணர்வு ஏற்பட்டது.
எத்தனையோ சிவப்புச் சிக்னல்களைத் தாண்டித் தாண்டி கபாலீஸ்வரர் கோயிலை தொட்ட போது டூவிலர் கொஞ்சம் வேகம் குறைந்தது. நடு ரோட்டில் போய்க் கொண்டிருந்த டூவீலர் அப்படியே கொஞ்சம் ஓரம் நகர்ந்தது.
இங்க எங்கே ஓட்டல் இருக்கு?. நான் விழித்தபடியே அவரின் பின்னால் உட்கார்ந்திருந்தேன்.
மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த டூவிலர் இப்போது ஓரிடத்தில் நின்றது.
“அம்மா எப்படியிருக்கீங்க’’ என்ற அவர் பேசிய போது படாரெனத்
திரும்பினேன் .
அங்கே அழகை அப்படியே அச்சுக் கோர்த்தது போன்ற பேரழகில் லட்சுமி அப்படியிருந்தாள். நடுத்தர வயதைக் கடந்திருந்தாலும் அவளின் இளமை இன்னும் பதினெட்டை விட்டு எட்டு வைக்காமலே இருந்தது.
முத்துப் பல்வரிசை அழகோடு அப்படியிருந்தாள். அந்தத் தெருவே அவளை வேடிக்கை பார்ப்பதற்கு வந்து போவது போலவே இருந்தது.
என்னம்மா பேர் வந்துச்சா?
“இல்லை சார்,
பத்துபேர் இருந்துச்சுன்னு சொன்னாங்க; அவ்வளவுதான்,
வரும் ; கண்டிப்பா வரும்; கவலப்படாதீங்க,
எப்படியிருக்கீங்க,
“இருக்கோம் சார்”
“சரிம்மா வரட்டுமா?”
“இப்ப நான் இந்த ஏரியாவுல இல்ல”
“தெரியும் சார். சொன்னீங்க”
“அடிக்கடி உங்கள பாக்க முடியாது”
“ஏன் சார் வாங்க. எப்ப வேணும்னாலும் பேசிட்டு வாங்க சார்”
“ஓ.கே.ம்மா வரட்டுமா? என்றார் தியாகராஜன்.
‘‘சரிங்க சார் ’’
இருவரும் விடை பெற்றோம்.
“சார் அவங்ககிட்ட என்ன பேசுனீங்க’’,
“அது ஒருபெரிய கதமுத்து”
“சார், நீங்க சொன்னது எனக்கு புரிஞ்சு போச்சு சார்”
“அப்படியா”
“ஆமா சார். ஏதோ இலைமறைக்காயா பேசுனீங்களே., அப்பவே என்னோட புத்தியில இதுதான் இருக்கும்னு சுள்ளுன்னு ஏறிருச்சு சார் என்றபோது தியாகராஜன் கொஞ்சம் திடுக்கிட்டார். அதை அவர் என்னிடம் வெளிக்காட்டாமல் இருந்திருக்க வேண்டும்.
“சார் அவங்க வீட்டுக்காரு ஜெயில்ல தான இருக்காரு என்ற போது தியாகராஜன் சாருக்கு மேலும் திகைப்பு கூடியது.
ஆமா முத்து, அந்தம்மாவோட வீட்டுக்காரு ஜெயில்லதான் இருக்காரு. கிட்டத்தட்ட 14 வருசத்துக்கு மேல இருக்காரு,
என்ன பிரச்சனைக்கு சார் ஜெயிலுக்கு போனாரு,
ஏதோ குடும்பத் தகராறாம் சண்டையில ஒரு ஆள தள்ளி விட்டுருக்காரு. கீழ விழுந்த ஆளு விழுந்த எடத்திலயே ஸ்பாட் அவுட்டு. அத அவங்க சொந்தக்காரங்க எல்லாம் சேர்ந்து மர்டர்ன்னு கேஸ் குடுத்திட்டதாங்க. இன்னைக்கோட 14 வருசமா உள்ள தான் இருக்காரு. இதுல ஒரு பெரிய விசயம் என்னன்னா அவரு உள்ள இருக்கும் போது தான் அவங்களோட அஞ்சு கொழந்தைகளும் பெறந்தது. இதெல்லாம் எப்படிம்மான்னு கேட்டேன்; கொஞ்சம் வெக்கப்பட்டுட்டே அதுலயும் வருத்தப்பட்டுடே அந்தம்மா பரோல்ல வரும் போதெல்லாம்….மகிழ்ச்சியா இருப்போம்னு சொன்னாங்க என்று அவர் சொன்ன போது அந்த அழகியின் திருஉருவம் என் கண்முன்னால் வந்து வந்து போனது.
ச்சே, இது எவ்வளவு பெரிய தியாகம். அந்த அழகிக்குள்ள இப்படியொரு அடர்த்தியான சோகமா,? என் மனம் முழுவதும் வேதனையில் நிறைந்த போது தியாகராஜன் சார் ஒரு தோசைக்கடையில் நிறுத்தினார்.
“முத்து , டைம் ஆயிருச்சு பார்சல் வாங்கிட்டுப் போவமா’’?,
ஓ.கே சார்.
உங்களுக்கு என்ன வேணும்
“ஏதாவது ஒண்ணு சார்”
“சரி ஓகே ரெண்டு ரெண்டு பொடி தோசை குடுங்க என்ற ஆர்டர் அவர் சொன்ன போது அந்தக்கடையிலிருந்து தூரத்திலிருந்த அந்த அழகியின் முகத்தைத் தேடினேன். அவள் அங்கே இருப்பது எனக்குத் தெரியாமலே இருந்தது.
எட்டி எட்டிப்பார்த்தும் அவள் என் கண்களுக்கு அகப்படவே இல்லை.
புகை வெளியேறும் தோசைக் கல்லில் எங்களுக்கான பொடி தோசை வெந்து கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *