தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
சென்னை, அக்.5-
சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈரடுக்கு மேம்பாலத்துடன் பறக்கும் சாலை அமைக்கும் பணிக்காக கூவம் ஆற்றில் தூண்கள் அமைத்து வருகிறது.
இந்த பணிக்காக கூவம் ஆற்றின் குறுக்கே பல இடங்களில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இது தொடர்பான புகாரை தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், செப்டம்பர் 30-ந் தேதிக்குள் கூவம் ஆற்றில் கொட்டிய கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
மேலும், இதுதொடர்பாக நீர்வள ஆதாரத்துறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில், ’67 சதவீத கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும். மீதமுள்ள கழிவுகளை அகற்ற கால அவகாசம் அளிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு தீர்ப்பாய நீதிபதி, ‘வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்கும் போது கூவம் ஆற்றில் முழுமையாக கட்டிட கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதை எப்படி ஏற்க முடியும்’ என அதிருப்தி தெரிவித்தார்.
பின்னர், ‘வருகிற 14-ந் தேதிக்குள் கட்டிட கழிவுகளை முழுமையாக அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தவறினால் அபராதம் விதிக்கப்படும்’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.