சென்னை, அக்.15-–
136 போலீஸ் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
போலீசார் மேற்கொண்டுள்ள பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-–
வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த 30 மற்றும் 14-ந்தேதிகளில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் முதலமைச்சர் விரிவான அறிவுரைகள் வழங்கினார். அதன்படி அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அதி தீவிரப்படை பயிற்சி பள்ளி மூலம் 20,898 போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 136 பேரிடர் மீட்பு குழுக்களாக பிரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை 6 கம்பெனிகள் பேரிடர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை, பேரிடர் சிறப்பு கட்டுப்பாட்டு அறை தகவல்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த குழுக்கள் அனுப்பப்பட்டு பேரிடர் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை மருதம் வளாகத்தில் மாநில போலீஸ் சிறப்பு கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரம் செயல்பட்டு வருகிறது என்றார்.