செய்திகள்

1,330 குறள்களை ஒப்பித்தால் தமிழ் இலக்கியம் படிக்க கட்டணம் இல்லை

கரூர், ஆக. 9–

திருக்குறளில் இருக்கும் 1330 குறள்களையும் ஒப்பிக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள், இளங்கலை தமிழ் இலக்கிய பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க, மூன்றாண்டுகளுக்கும் கட்டணம் இல்லை என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி தாளாளர் க. செங்குட்டுவன் இதுகுறித்து கூறி இருப்பதாவது:–

இன்றைய தலைமுறையினரிடம் குறிப்பாக மாணவ, மாணவிகளிடம் நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து, செல்லிடப்பேசி, வீடியோ கேம் என, மாணவர்களின் வாழ்வை சிதைக்கும் உலகில் மூழ்கியிருக்கிறாா்கள்.

அவசர உலகில் பெற்றோா்களும் தங்களது குழந்தைகளைக்கூட கண்காணிக்க இயலாமல் திணறி வரும் நிலையில், நாட்டின் இளையத் தலைமுறையினரை வள்ளுவன் காட்டிய வழியில் வாழ்ந்து அறிவார்ந்த சமுதாயமாக மாற்றும் நோக்கத்தில், எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லாமல், எங்கள் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இளங்கலை வகுப்பில் சேரும் மாணவர்கள், திருக்குறளில் உள்ள 1330 குறளையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்கு, மூன்றாண்டுகள் படிப்பதற்கும், கல்லூரியில் தங்குவதற்கும் கட்டணமில்லை என்கிற அறிவிப்பை கொடுத்துள்ளோம்.

அறிவிப்பின் நோக்கம்

1330 குறள்களோ அல்லது அதைவிடசற்று குறைந்தாலும் பரவாயில்லை. குறள்களைக் கற்று, அதன் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தும் மாணவர்கள் நிச்சயம் எதிர்காலத்தில் சமுதாய சீர்திருத்தவாதியாக, சிறந்த பண்பாளராக உருவாவார்கள் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

தமிழ்வழியில் கற்போருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதால், மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்த்து, மூன்றாண்டுகள் படிப்பை முடிக்கும்போது, அவர்கள் அரசு வேலை பெறும் வகையில், முதலாமாண்டில் கல்விக் கற்கத் தொடங்கிய உடனே அவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி சிறப்புப் பயிற்சியும் வழங்குகிறோம். கல்வியுடன் ஒழுக்கத்தையும் போதித்து, அரசுப் பணியில் சேரும்போது, மக்கள் சேவையில் லஞ்ச, லாவண்யமின்றி நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு, என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *