செய்திகள்

1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சோமாஸ்கந்தர் சிற்பம் கண்டுபிடிப்பு

Spread the love

விழுப்புரம், பிப்.2-

விழுப்புரம் அருகில் உள்ள நன்னாடு கிராமத்தில்1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிசய சோமாஸ்கந்தர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடுநாட்டு வரலாறு பண்பாட்டு ஆய்வு நடுவத்தின் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன், கண.சரவணகுமார், வீ.விஷ்ணுபிரசாத், அ.அகிலன் ஆகியோர் விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு கிராமத்தில் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது மண்ணில் புதைந்திருந்த ஒரு சிற்பத்தை ஆய்வு செய்ததில் அது 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சோமாஸ்கந்தர் அரிய சிற்பம் எனத் தெரியவந்தது.

இதுபற்றி எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது-

விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு கிராமம் வரலாற்றுச் சிறப்புவாய்ந்தக் கிராமம். ஏற்கனவே இங்கு பல்லவர்கால மும்மூர்த்திகள், ஐயனார், கொற்றவை, வீரனின் நடுகல் உள்ளிட்டச் சிற்பங்கள் கண்டறியப்பட்டு வழிபாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில் இங்குள்ள நெல்(லி)மேடு எனும் பகுதியில் களஆய்வு செய்தோம். அப்பகுதி கிராம மக்கள் பெரும்பாலோரால் குலதெய்வமாக வணங்கப்பட்டு வரும் பெரியாண்டவர் கோயில் அமைந்துள்ளப் பகுதியாகும். அப்போது மண்ணுக்குள் சிற்பம் ஒன்று புதைந்திருந்ததுக் கண்டறியப்பட்டது. இதை வெளியே எடுக்க வேண்டும் என்று சொன்னபோது கிராமப் பொதுமக்கள் தயங்கினர். இத்தனை ஆண்டுகாலம் புதைந்திருக்கும் சிற்பத்தை வெளியில் எடுத்தால் ஏதாவது நேர்ந்துவிடலாம் எனும் அச்சமும் ஒரு காரணமாக இருந்தது.

ஆனாலும் கிராம முக்கியஸ்தர்களிடம் நடத்தியத் தொடர் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நேற்று மேற்காணும் சிற்பம் இருந்தப் பகுதியில் மண் அகற்றப்பட்டு சிற்பம் முழுமையாக வெளிப்பட்டது. சுமார் 45 செ.மீ. உயரமும் 30 செ.மீ. அகலமும் கொண்ட பலகைக் கல்லில் சிற்பத் தொகுதி வடிக்கப்பட்டுள்ளது. இதில் சிவபெருமான் வலது காலை மடக்கி இடது காலைத் தொங்கவிட்டு அமர்ந்திருக்கிறார். இடது காலடியில் முயலகன் உருவம் காணப்படுகிறது.

சிவபெருமான் வலது கையை தொடை மீது வைத்திருக்கிறார். அருகில் உமையவள் வலது காலை மடக்கி இடதுகாலைத் தொங்கவிட்ட நிலையில் நளினத்துடன் அமர்ந்திருக்கிறார். அவரது வலது முழங்கால் மீது சிவபெருமானின் இடதுகை உள்ளது. சிவனுக்கு மேலே சோமாஸ்கந்தர்-குழந்தை உருவமாக முருகன் காட்டப்பட்டுள்ளார். உமையவள் தோளுக்குமேலே தட்டேந்திய நிலையில் பணிப்பெண் உருவம் காட்டப்பட்டுள்ளது. ஆடை அணிகலன்களுடன் உருவங்கள் தெளிவாகத் தெரியும்படி சிற்பங்கள் கலைநயத்துடன் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. இது பல்லவரின் தொடக்க காலத்தைச் (கி.பி.7-8ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தச் சிற்பம் சோமாஸ்கந்தர் குழுமம்தான் என மூத்தத் தொல்லியல் ஆய்வாளர் சென்னை ராஜகோபால் சுப்பையா உறுதிப்படுத்தியுள்ளார். “அழகான, புதுவகையான கிராமியக் கலைச்சார்ந்த சிற்பம். பல்லவர் காலமாக இருந்தாலும் சாளுக்கியர், இராஷ்டிரகூடர் தொடர்பு இருக்குமா? எனவும் ஆராயலாம்” எனத்தெரிவித்து இருக்கிறார்.

நன்னாடு கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள சோமாஸ்கந்தர் குழுமச் சிற்பம் தமிழக சிற்பக்கலை வரலாற்றுக்கு குறிப்பிடத் தகுந்த புதிய வரவாகும். குறிப்பிட்ட இந்த இடத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த சிவலிங்கங்கள், நந்தி, சூலக் கற்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் பெரியாண்டவர் கோயில் பகுதியில் மிகப்பெரிய சிவாலயம் இருந்து மறைந்திருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இந்தக் கிராமத்தில் ராமன் தோப்பு எனுமிடத்தில் புதைந்த நிலையில் இருக்கும் பல்லவர்கால மூத்ததேவி சிற்பம், குறவன்கொல்லை எனுமிடத்தில் நாயக்கர் கால நடுகல் சிற்பமும் களஆய்வின் போது கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் எழுமேடு எனுமிடத்தில் மத்தியகாலப் பானை ஓடுகளும் காணப்படுகின்றன. இதன் மூலம் நன்னாடு கிராமம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த தொன்மைமிக்க கிராமம் என்பது தெரியவருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

களஆய்வின்போது நன்னாடு நாட்டாண்மை பெ.ஏழுமலை, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர்கள் என்.ஜி.பி.சுரேஷ், இ.சங்கர், குமார்ஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோத.குமார், என்.பி.ஏழுமலை, ஏ.வெங்கட், டி.மூர்த்தி, சி.குருசந்திரன், ஆ.ரகுராமன், இ.வேல்முருகன், கே.வேல்முருகன், எஸ்.கலியமூர்த்தி, ஜெ.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *