சென்னை, ஜன 1–
13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து ‘‘போக்சோ’’ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு விதித்துள்ளது.
இதுகுறித்து இன்று தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ”2023ம் ஆண்டு, சென்னை பெருநகர காவல், பூக்கடை காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 13 வயது சிறுமியை ஒரு நபர் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, மேற்படி சிறுமியின் தாயார் கொடுத்த புகார் மீது பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 43 வயது நபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, காவல்துறையினரால் முறையாக விசாரிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தயார் செய்து, நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
வழக்கில் கைது செய்யப்பட்ட 43 வயது மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு ஆயுள் சிறைதண்டனை, ரூ.30,000- அபராதமும் வழங்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி என தீர்ப்பில் குறிப்பிட்டார்.
வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சுமார் 1 ½ வருடத்தில் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டு தெரிவித்தனர்.