செய்திகள்

13-வது நாளாக நீடிக்கும் போர் இஸ்ரேல் வந்தார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

ஜெருசலேம் அக். 19–

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் வந்தடைந்தார். அங்கு அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.

ஹமாசின் கட்டுப்பாட்டில் உள்ள காசாவை 13-வது நாளாக இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், பாலஸ்தீனத்துக்கு அரபு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பிலும் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல்–ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் தலைவர்கள் அந்த நாட்டிற்கு நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக நேற்று இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காசா மற்றும் மேற்கு கரையில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.832 கோடி) நிதியுதவியை அமெரிக்கா வழங்கும் என அறிவித்தார்.

ஜோபைடன் மறுப்பு

இந்தப் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், காசா மீது தொடர்ந்து இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தினர். இதனால் அதிருப்தி அடைந்த அரபு தலைவர்கள், ஜோர்டானில் பைனுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தனர்.

இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா புறப்பட்டார். விமான நிலையத்தில் ஜோ பைடனிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அப்போது, போரில் இஸ்ரேல் ராணுவத்துடன் அமெரிக்கா கைகோர்க்கும் என கூறப்படுகிறது என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, அந்த தகவலில் உண்மையில்லை, நான் ஒருபோதும் அப்படி சொல்லவில்லை. காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செய்வதற்காக 20 டிரக்குகளை அனுமதிக்க எகிப்து அதிபர் ஒப்புக்கொண்டுள்ளார் என தெரிவித்தார்.

இதனிடையே இஸ்ரேல்–லெபனான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருவதால் அமெரிக்க மக்கள் லெபனானுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் வந்தார்

ரிஷி சுனக்

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் இன்று அந்நாட்டுக்கு வந்தடைந்தார்.

டெல் அவிவ் நகருக்கு சென்ற ரிஷி சுனக்கை இஸ்ரேல் அதிகாரிகள் வரவேற்றனர்.

அங்கு அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஆகியோரை ரிஷி சுனக் சந்திக்க உள்ளார். அப்போது, ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரிட்டன் சார்பில் ரிஷி சுனக் இரங்கல் தெரிவிக்க உள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ரிஷி சுனக் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:– சோகத்தில் உள்ள இஸ்ரேலுக்கு வந்துள்ளேன். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என கூறியுள்ளார்.

காசாவில் மனிதநேய உதவிகளை வழங்க அனுமதிக்கும்படி வலியுறுத்த உள்ள ரிஷி சுனக், இஸ்ரேலில் உள்ள பிரிட்டன் நாட்டவர்களை மீட்பது குறித்தும் விவாதிக்க உள்ளார்.

பெண் கமாண்டர் பலி

இஸ்ரேலின் பாதுகாப்பு படை தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு பெண் உறுப்பினரும், பாலஸ்தீனிய சட்டசபை கவுன்சில் உறுப்பினராக இருந்த ஜமிலா அப்துல்லா தஹா அல் சாந்தி என்பவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

போர் முடிவு:

சீன அதிபர் விருப்பம்

சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறுகையில், இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலான போர் முடிவுக்கு வர வேண்டும். பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர அரபு நாடுகளுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது. தற்போது ஏற்பட்ட மோதல் மேலும் அதிகரிக்காமல் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என கூறியுள்ளார்.

மோதல் பெரிதாகக் கூடும் என்று மத்திய கிழக்கு நாடுகளின் ஐக்கிய நாடுகள் அவைக்கான தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளின் தூதர் டார் வென்ஸ்லேண்ட் கூறுகையில், மோதல்

இன்னும் விரிவடைய வாய்ப்பு இருக்கிறது. மிகவும் ஆபத்தானதாக இது அமையலாம் என்று கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *