செய்திகள்

13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஏப்.21–

வளிமண்டலச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

‘தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 1.5 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக இன்று (21ந் தேதி) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, மதுரை, திருச்சி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை (22ந் தேதி) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

23, 24, 25ந் தேதி ஆகிய தினங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் எட்டயபுரத்தில் 3 செ.மீ. மழையும் தருமபுரி, ஏலகிரியில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *