செய்திகள்

13 மாநிலங்களிலுள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

100க்கும் மேற்பட்ட பிஎப்ஐ நிர்வாகிகள் கைது

சென்னை, செப். 22–

தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் நள்ளிரவு முதல் விடிய விடிய சோதனை நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்ட பிஎப்ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்பது இந்தியாவில் செயல்படும் ஒரு இஸ்லாமிய அமைப்பாகும். இந்த அமைப்பின் மீது தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்தல், தீவிரவாதத்திற்கு பயிற்சிகள் அளித்தல் மற்றும் தீவிரவாத இயக்கங்களுடன் சேர்ந்து நாச வேலையில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டு உள்ளது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடரப் பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் தேசிய புலனாய்வு நிறுவனம் சோதனையில் ஈடுபட்டது.

இதில், தெலுங்கானாவில் 38 இடங்களிலும், ஆந்திராவில் 2 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் போது டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், இரண்டு கத்திகள் மற்றும் ரூ.8.31 லட்சத்திற்கும் அதிகமான பணம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும்

இந்நிலையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் நள்ளிரவு முதல் விடிய விடிய சோதனை நடத்தினர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் பேகம்பூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் பராக்கத்துல்லா வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சேதனை நடத்தியுள்ளனர். மேலும், மதுரை மாவட்டத்தில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகள், அலுவகங்களில் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது. இதில், நெல்பேட்டையில் பிஎஃப்ஐயின் தேசிய செயற்குழு உறுப்பினர் யூசுப் வீட்டிலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. இதைத்தவிர, கோரிப்பாளையம், நெல்பேட்டை, வில்லாபுரம், யாகப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர்.

கோவையில் செயற்குழு

உறுப்பினர் கைது

கோவையில் பிஎஃப்ஐ நிர்வாகிகள், அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கோவை, கரும்புக்கடையில் உள்ள பிஎஃப்ஐ நிர்வாகி இஸ்மாயில் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர், இஸ்மாயிலை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு போராட்டம், கூச்சல், குழப்பம் என பதற்றமான சூழல் உருவானது.

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் உள்ள மதரஸாவிலும் போலீஸ் உதவியுடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதேபோல், தென்காசி, தேனி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிஎஃப்ஐ இடங்களிலும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூரில் மாவட்டத்

தலைவர் கைது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொளக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் அபூபக்கர் மகன் பையாஸ் அகமது (32). இவர் கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவராக உள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் அவரது வீட்டுக்கு சென்ற என்.ஐ. ஏ அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டை சோதனை செய்து அவர் பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து அழைத்துச் சென்று சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றனர். இதனை அறிந்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள், தொண்டர்கள், அவரது உறவினர்கள் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரளாவில் 50க்கும்

மேற்பட்ட இடங்களில்

கேரளாவில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உட்பட பி.எப்.ஐ அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை( என்ஐஏ ) மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதே போல் தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களிலும் இந்த சோதனை நடத்தப்படுகிறது. என்ஐஏவின் சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎஃப்ஐ நிர்வாகிகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.