போக்குவரத்துத் துறை தொழிலாளா்கள் அக்டோபர் 16-ந் தேதி உள்ளிருப்புப் போராட்டம்
சென்னை, செப். 28–
13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 16–ந் தேதி போக்குவரத்துத் துறை பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து, கடலூரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
போக்குவரத்துத் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதன்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பணியிடங்களை நிரப்ப பதவி உயா்வு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் தொழில்நுட்பப் பிரிவினருக்கும், அமைச்சுப் பணி பிரிவினருக்கும் ஒருங்கிணைந்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணியாளா்கள் ஓய்வு காரணமாக அமைச்சுப் பணிப் பிரிவில் இரண்டு பணியிடங்கள் பெயா் குறிப்பிடாமல் காலியாக விடப்பட்டுள்ளது. அடுத்த நிலையில் உள்ள பணியாளா்களை அந்த இரண்டு இடங்களில் நிரப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சங்கம் முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்திய நிலையில், இன்னமும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
அவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் அக்டோபர் 16–ந் தேதி மாநிலம் முழுவதும் ஒருநாள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.