புதுடெல்லி, ஜூலை 6–
ஹாத்ரஸ் சம்பவத்தின் தேடப்பட்டுவந்த முக்கியக் நபர் தேவ்பிரகாஷ் மதுக்கர் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கைதானார். டெல்லியில் சிகிச்சை பெற்று வந்தவரை இன்று உத்தரபிரதேச போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
உத்தரப்பிரதேசம் ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராராவில் போலே பாபாவின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. 80,000 பேருக்காக அனுமதிபெற்றதில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் வந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் தலித் மற்றும் பிறடுத்தப்பட்ட சமூகத்தினர். இதன் முடிவில் ஏற்பட்ட நெரிசலில் 112 பெண்கள் உட்பட 121 பேர் பலியானார்கள்.
இந்தச் சம்பவத்தில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அதன் முக்கியக் குற்றவாளியாக தேவ்பிரகாஷ் மதுக்கரை சேர்த்தது. இவருடன் பதிவான பெயர் தெரியாதவர்களில் ஆறு பேர் ஏற்கெனவே கைதாகி விட்டனர். எனினும், இந்த முதல் தகவல் அறிக்கையில் சம்பவத்துக்கு காரணமான முக்கிய நபராகக் கருதப்படும் நாரயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா எனும் சூரஜ்பால் ஜாத்தவ் பெயர் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில், தலைமறைவான தேவ்பிரகாஷ் டெல்லியின் உத்தம்நகரின் நஜப்கரின் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், அங்கு நேற்று நள்ளிரவில் சென்றவர்கள் தேவ்பிரகாஷை கைது செய்தனர். இதில் அவரே முன்வந்து சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தேவ்பிரகாஷை பற்றி துப்பு அளிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசையும் போலீஸார் அறிவித்திருந்தனர். முக்கியக் குற்றவாளியான தேவ்பிரகாஷ் ஹாத்ரஸுக்கு அழைத்து வந்து விசாரிக்கப்பட்டு வருகிறார். இன்று தேவ்பிரகாஷை ஹாத்ரஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதன் பிறகு அவரை காவலில் எடுத்து மாநில போலீஸ் தீவிர விசாரணை நடத்த உள்ளது.
மாநில அரசு அலுவலரான தேவ் பிரகாஷ் ஹாத்ரஸ், பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் அவரை நேற்று உபி அரசு பணியிலிருந்து விலக்கி விட்டது நினைவுகூரத்தக்கது.