குடியாத்தம், மார்ச்.13-
குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் சங்கம் இணைந்து நன்கொடையாளர்களின் உதவியால் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவரை திறந்து வைக்கும் நிகழ்ச்சி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜி.எஸ்.அரசு தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் வ.நாராயணன் வரவேற்றார்.
அமலுவிஜயன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, ஒன்றியகுழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கலெக்டர் சுப்புலெட்சுமி கலந்துகொண்டு பள்ளியின் சுற்றுச்சுவரை திறந்து வைத்து பேசினார்.
அப்போது, வேலூர் மாவட்டத்தில் சுமார் 170 பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லை. இதில் 120 பள்ளிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலமாக சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுபோன்ற முயற்சிகள் மேற்கொண்ட அனைவருக்கும் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை (பொறுப்பு) தயாளன், தாசில்தார் மெர்லின் ஜோதிகா, நகராட்சி ஆணையாளர் எம். மங்கையர்கரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் வி.சடகோபன் நன்றி கூறினார்.