செய்திகள்

12 வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு ரூ.4.21 கோடி ஊக்கத் தொகை

சென்னை, செப். 14–

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு 4 கோடியே 21 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தோனேஷியாவின் ஜகர்த்தா மற்றும் பிளமிங் நகரங்களில் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற்ற 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 5 கோடியே 20 லட்சம் ரூபாய் மற்றும் அவ்வீரர்களின் 16 பயிற்றுநர்களுக்கு 78 லட்சம் ரூபாய் அரசின் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்படுமென அறிவித்ததின் பேரில், இன்று (14–ந்தேதி) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 கோடியே 70 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகையாகவும், பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் 11 பயிற்றுநர்களுக்கு 51 லட்சம் ரூபாயும், என மொத்தம் 4 கோடியே 21 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடும் நோக்கில், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பன்னாட்டு அளவிலும் அகில இந்திய அளவிலும், நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்குதல், திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உயரிய பயிற்சி அளித்தல், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையங்கள் அமைத்தல், சிறந்த விளையாட்டு வீரர்கள் மேலும் பல சாதனைகள் புரிய உதவித் தொகை வழங்குதல், பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்றுநர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

யார், யார்?

அதன்படி, 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளத்தில் ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் மற்றும் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தருணுக்கு 60 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும்;

பெண்களுக்கான ஸ்குவாஷ் குழுப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், பெண்களுக்கான ஸ்குவாஷ் ஒற்றையர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்ற தீபிகா கார்த்திக் மற்றும் ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும்;

ஆண்களுக்கான ஸ்குவாஷ் குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹரிந்தர் பால் சிங் சந்தூருக்கு 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும்;

ஆண்களுக்கான பாய்மர படகு 49er-fx போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வருண் தக்கர் மற்றும் கே.சி. கணபதி ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும்;

ஆண்களுக்கான குழு மற்றும் கலப்பு இரட்டையர் மேசைப்பந்து போட்டிகளில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற சரத்கமலுக்கு 40 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும்;

ஆண்களுக்கான குழுப் மேசைப்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சத்யன் மற்றும் அமல்ராஜ் ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும்;

ஆண்களுக்கான ஹாக்கி குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ருபீந்தர் பால் சிங் மற்றும் பி.ஆர். ஸ்ரீஜேஷ் ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும்;

பெண்களுக்கான பாய்மரப்படகு 49er-fx போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வர்ஷா கௌதமுக்கு 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும்; என மொத்தம் 3 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை 12 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும்;

பயிற்றுநர்கள்

மேலும், பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பயிற்றுநர்கள் டி. ராமச்சந்திரன், குன்ஹி முகமது, அழகேசன், ஏ. பார்த்திபன், பி. பாலமுருகன், ஏ. சீனிவாசராவ், ஏ. முரளிதரராவ், எஸ். ராமன், அந்தோணி அற்புதராஜ், ஹர்மன் பிரீத்சிங், கே.எச். ஷான் ஆகிய 11 பயிற்றுநர்களுக்கு 51 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கி வாழ்த்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சரிடமிருந்து உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளைப் பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்கள் முதலமைச்சருக்கு தங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா. பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *