செய்திகள்

12 லட்சம் மலர்களுடன் சென்னை செம்மொழிப் பூங்காவில் பிருமாண்டமான மலர்க்கண்காட்சி

ஊட்டியை நினைவூட்டும் வகையில் பூக்களால் வடிவமைக்கப்பட்ட பட்டாம்பூச்சி, ஆமை யானை, இதயம் உள்பட பல்வேறு எழில் வடிவங்கள்


நில்… கவனி…


சென்னை, பிப். 17–

மலர்க்கண்காட்சிகளை பார்க்க ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் சென்ற நிலையில் சென்னை செம்மொழிப் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட பிருமாண்ட மலர்க்கண்காட்சி, பொதுமக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், மாணவர்களுக்கு நான் முதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்கள், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் என்று நாட்டிலேயே முதன்முதலாக, பல்வேறு புதிய புதிய திட்டங்கள் அன்றாடம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை மக்கள் கண்டு களிக்கும் வகையில் 3 ஆண்டுக்கு முன்பே, சென்னையில் மலர்க்கண்காட்சியை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்தது.

சென்னையில் ஒரு ஊட்டி

ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் நடைபெறும் கோடை விழா, சாரல் விழா என்ற பெயரில் நடத்தப்படும் மலர்க்கண்காட்சியை, பெரும் வசதிபடைத்தவர்கள், ஆயிரக்கணக்கில் செலவு செய்து, தங்கள் குழந்தைகள், குடும்பத்தினரோடு சென்று பார்த்து மகிழ்வார்கள். சென்னை போன்ற நகரங்களில் உள்ள அனைவருக்கும், மலைவாழ்விடப் பகுதிகளில் நடைபெறும் மலர்க்கண்காட்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

இந்த குறையே போக்கும் வண்ணம், 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஊட்டி, கொடைக்கானல், மைசூரு போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வண்ண மலர்களைக் கொண்டு சென்னை கலைவாணர் அரங்கில் 3 நாட்கள் நடைபெற்ற மலர்க்கண்காட்சி 200 வகையான மலர்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் சென்னை செம்மொழிப் பூங்காவில் கலைஞர் நூற்றாண்டு தொடக்கமாக, ஜூன் 3 ந்தேதி முதல் 3 நாட்கள் மலர்க்கண்காட்சி நடத்தப்பட்டது.

3 வது ஆண்டில் 12 லட்சம் மலர்கள்

இந்நிலையில் நடப்பாண்டு, 3 வது முறையாக சென்னையில், மிக பிருமாண்டமாக கலைஞர் நூற்றாண்டு மலர்க் கண்காட்சியை தமிழ்நாடு தோட்டக்கலை துறை ஏற்பாடு செய்துள்ளது. சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில், 12 லட்சம் மலர்களைக் கொண்டு, ஊட்டி மலர்க்கண்காட்சியில் அமைப்பது போல், யானை, பட்டாம்பூச்சி, ஆமை, இதயம் என ஏராளமான மலர் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, செம்மொழி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடை செய்யப்பட்டு, அடடடா….என்று வியக்கும் அளவுக்கான 10 நாட்கள் மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ந்தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மலர்க்கண்காட்சியை தொடங்கி வைத்தார். 20 ந்தேதி வரையில் நடைபெற உள்ள இந்த மலர்க்கண்காட்சியை காண, காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையில் அனுமதி வழங்கப்படுகிறது. பெரியவர்களுக்கான கட்டணம் ரூ.150 என்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கட்டணம் ரூ. 75 என்றும் வசூலிக்கப்படுகிறது. மலர்க்கண்காட்சியிலுள்ள மலர்த் தொட்டிகளை பாதுகாக்கவும், வருகை தரும் சுற்றுலாவாசிகளுக்கு வழிகாட்டவும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டக்கலைத் துறை பணியாளர்கள் நாள் முழுக்க பணி செய்கிறார்கள்.

கலை, இசை நிகழ்ச்சிகள்

மாலை வேளைகளில், அங்குள்ள திறந்தவெளி அரங்கில் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. அதனைப் பார்க்கும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர் என்றே சொல்லலாம். 12 லட்சம் மலர்த்தொட்டிகளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் வடிவமைக்கப்பட்டு, பார்வையாளர்களின் கண்களையும் எண்ணத்தையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மலர்க்கண்காட்சியின் அனைத்து பகுதிகளிலும் தூய்மையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் கழிவறை வசதியும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செம்மொழிப் பூங்காவின் ஒரு பகுதியில் நுழைந்தால், ஒவ்வொரு பகுதியாக பார்த்துக்கொண்டே செல்ல முடியும். வருகை தரும் அனைவரும் விதவிதமான வண்ண வண்ண மலர்களை பார்க்கும்போது, குழந்தைகளின் மனநிலையில் பூரிப்படைவதுடன், புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதில் பெரும் ஆர்வம் செலுத்துகின்றனர். அழகிய மலர் உருவங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவோருக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், அனைவரும் தங்களது செல்பேசிகளில் சுயப்படம் எடுப்பதுடன், மலர்கள் போன்ற தங்களுடைய மென்மையான குழந்தைகளை, மலர்களுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து குதூகலம் அடைகின்றனர்.

5 மணி நேரம் மகிழலாம்

செம்மொழிப் பூங்காவின் மலர்க்கண்காட்சிக்குள் நுழைந்தால், குறைந்தது 3 மணி நேரம் தொடங்கி 5 மணி நேரம் இயற்கையான மலர்களோடு நாம் செலவளிக்கலாம் என்பதைவிட உள்ளத்துக்கும் மூளைக்கும் இயற்கையை முதலீடு செய்யலாம் என்றே சொல்ல வேண்டும். வண்ண வண்ண மலர்களை பார்க்கும் போதே, ஒவ்வொருவருக்கும் உள்ள வாழ்க்கை சவால்களை மறந்து, முகத்தில் மட்டுமின்றி உள்ளத்திலும் ஒரு பெருமலர்ச்சி ஏற்படுவதை உணர முடியும். ஒரு நாளில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரையில் இந்த மலர்க்கண்காட்சிக்கு வருகை தருகின்றனர் என்று கூறப்படுகிறது. மலர்க்களை விட்டு பிரிய மனமின்றி வெளியேறும் இடத்தில் ஏராளமான உணவு கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மலர்களை பிரிய மனமில்லாதவர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில், ரூ.100 விலையில், விதவிதமான ரோஜா மலர்கள் விற்பனையும் செய்யப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் விரும்பும் வகையில், அனைத்து, குழந்தைகள், இளைஞர்கள் விரும்பும் வகை வகையான உணவு வகைகளும், நொறுவை வகைகளும் விசாலமான இடத்தில் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை வாழ்விடங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு மலர்க்கண்காட்சியை பார்க்க செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தை தணிக்கும் வகையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், இந்த கலைஞர் நூற்றாண்டு மலர்க்கண்காட்சி மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்று, வருகை தந்திருந்தவர்கள் மகிழ்ச்சியோடு சொல்வதை கேட்க முடிந்தது. பிருமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை துறையின் இந்த பெரும் முயற்சி பெரும் பாராட்டுக்குரியது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *