செய்திகள்

12 மணி நேரம் கம்பு சுற்றி சிலம்பத்தில் ஆஸ்கார் சாதனை படைத்த கிராமத்து மாணவர்கள்

வத்தலக்குண்டு, ஏப். 12–

ஆத்தூர் மற்றும் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிராமத்து மாணவர்கள் தொடர்ந்து 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி ஆஸ்கார் சாதனை படைத்துள்ளனர்.

தமிழர்களின் அடையாளமான சிலம்பம் தற்போது உலகளவில் பிரசித்தி பெற்று வருகிறது. சிலம்பத்தில் சாதனை புரிய வேண்டும் என கிராமத்து மாணவர்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று உடற்பயிற்சியுடன் மனவலிமையும் உடல்வலிமையும் பெறும் சிலம்பம் பயிற்சி பெறுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிராமத்து மாணவர்கள் ஆசிரியர் செந்தில்குமாரிடம் சிலம்பம் பயிற்சி பெற்று வருகின்றனர். முதன் முதலாக பயிற்சி பெற்ற 25 மாணவர்களும் திண்டுக்கலில் நடைபெற்ற ‘நேபுள்புக் ஆப் ரெக்காட்’ புத்தகத்தில் தொடர்ந்து 9 மணி நேரம் சிலம்பம் சுற்றி பதிவு செய்தனர்.

உலகளவில் சாதனை

இரண்டாவதாக பெரியகுளத்தில் நடைபெற்ற ஆஸ்கார் சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடர்ந்து 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை படைத்தனர். கிராமத்து மாணவர்கள் உலக அளவில் சிலம்பத்தில் சாதனை படைத்து வருவது பாராட்டத்தக்கது.

அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை, ஆத்தூர், சித்தரேவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராமத்து இளைஞர்கள் சிறப்பான முறையில் பயிற்சி பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா காலத்தில் ஏதாவது ஒரு துறையில் பயிற்சி பெற வேண்டும் என்றும் ஆன்லைன் பாடத்துடன் சிறப்பு பயிற்சியாக சிலம்பம் பயிற்சி பெற்று வருகின்றனர். இப்பயிற்சியை பயிற்சியாளர் செந்தில்குமார் கிராமம் தோறும் சிறப்பாகப் பயிற்சி பயிற்றுவிப்பதுடன் உலக சாதனை மற்றும் சிலம்ப போட்டிகளில் பங்கு பெற சிலம்ப பயிற்சியாளர்களைத் தயார்படுத்தி வருகிறார்.

இந்த சிலம்பு பயிற்சி தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய செல்வி, ‘கிராமத்து மாணவர்கள் ஆர்வத்துடன் சிலம்பம் பயின்று வருகின்றனர். அவர்களுடைய திறமை உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *