செய்திகள்

12 ந் தேதி விண்ணில் செலுத்தப்படும் ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்

ஸ்ரீஹரிக்கோட்டா, ஆக. 7–

பூமி கண்காணிப்பு செயற்கை கோளுடன் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட், 12 ந் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாத நிலை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு (இஸ்ரோ) ஏற்பட்டது. நடப்பு ஆண்டில் பிப்ரவரி 28ஆம் தேதி ‘பி.எஸ்.எல்.வி. சி-51’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதில் பொருத்தப்பட்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த ‘அமேசோனியா’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கை கோள் மற்றும் அதனுடன் 18 செயற்கை கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டுக்கான இரண்டாவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டை விண்ணில் ஏவ இஸ்ரோ தயாராகி வருகிறது.

14–வது ராக்கெட்

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது:–

இயற்கை பேரழிவுகள், வேளாண்மை, வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, பனி மற்றும் பனிப்பாறைகள் பற்றி அறிய, 2,268 கிலோ எடை கொண்ட ‘ஈ.ஓ.எஸ்.-03’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கை கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோள், ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10’ ராக்கெட்டில் பொருத்தப்பட்டு, ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவதளத்தில் இருந்து, விண்ணில் ஏவுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது விண்ணில் செலுத்தப்படுவது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 14 வது ராக்கெட்டாகும்.

விண்ணில் செலுத்தப்படும் பூமி கண்காணிப்பு செயற்கை கோள், பூமியின் மேல்பரப்பில் இருந்து 36,000 கி.மீ தொலைவில் நிலை நிறுத்தப்படுகிறது.

இந்த ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10’ ராக்கெட்டில் முதன்முறையாக செயற்கை கோளை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதற்காக 4 மீட்டர் விட்டம் கொண்ட கூம்பு வடிவ வெப்பத் தகடு பொருத்தப்பட்டு இருக்கிறது. இதற்கான ‘கவுன்ட் டவுன்’ அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *