செய்திகள்

12 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெருமாள் ஐம்பொன் சிலையை ரூ.12 கோடிக்கு விற்க முயற்சி

Makkal Kural Official

7 பேர் கைது

தஞ்சாவூர், ஆக. 10–

தஞ்சாவூர் அருகே 12 ஆண்டுகளாக மறைத்து வைத்து ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற பெருமாள் ஐம்பொன் சிலையை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மீட்டனர். இது தொடர்பாக 7 பேரை கைது செய்துள்ளது.

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழமையான சிலையை கடத்திச் செல்ல முயல்வதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் சரக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே மேலதிருவிழாபட்டியில், கார் ஒன்றும், இரண்டு பைக் சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டு இருந்தது. இதனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது, காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழங்கால 2.5 அடி உயர உலோகப் பெருமாள் சிலையை கைப்பற்றினர். வாகனத்தில் இருந்த சென்னை அரும்பாக்கம், ஜெகநாதன் நகரை ராஜேந்திரன் (52), கும்பகோணம் அருகே அலமங்குறிச்சியை சேர்ந்த ராஜ்குமார்(36), திருவாரூர் இனாம்கிளியூரை சேர்ந்த தினேஷ்(28) ஜெய்சங்கர்(58), கடலூர் மாவட்டம் நாட்டார்மங்கலம் பகுதியை சேர்ந்த விஜய்(28) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இனாம்கிளியூரை சேர்ந்த தினேஷ் என்பவரின் தந்தை 12 ஆண்டுகளுக்கு முன் தொழுவூர் ஆற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது 2.5 அடி உயர பெருமாள் சிலை கிடைத்துள்ளது. இது குறித்து வருவாய் துறையினரிடம் தகவல் தெரிவிக்காமல், தனது மாட்டு கொட்டகையில் மறைத்து வைத்து இருந்துள்ளார். இந்த சிலையை தினேஷ் கண்டெடுத்தார்.

அவரும் வருவாய்துறையினரிடம் தெரிவிக்காமல் சிலையை, 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் என முயன்றுள்ளார். இதில் தனது நண்பர்கள் மூலம் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் உதவியை நாடியுள்ளார். பிறகு தினேஷ் தனது நண்பர்களான ராஜ்குமார், ஜெயசங்கர், விஜய் ஆகியோர் மூலம் சென்னைக்கு கடத்தி செல்ல, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரை சேர்ந்த ஹாரிஸ் (26) காட்டுமன்னார்குடி அருகே கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (26) ஆகியோர் பாதுகாப்புக்கு அழைத்துக்கொண்டு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து 7 பேரும் கைது செய்யப்பட்ட சிலையை பறிமுதல் செய்து, கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சிலையானது 15 முதல் 16ம் நுாற்றாண்டு சோழர்கள் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *