செய்திகள்

12ந்தேதி 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி: அமைச்சர்

சென்னை, செப். 5–

வரும் 12 ந் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைத்து அதற்கான பணிகள் நடைபெற உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்ன சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:–

தற்போது நிபா வைரசின் தாக்கம் குறித்து நாங்கள் அறிந்த உடனேயே

தமிழ்நாடு – கேரளா இடையேயான 9 எல்லை மாவட்டங்கள் வழியாக கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கு நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் காய்ச்சல் முகாம்கள் நடத்தி அவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அம்மாவட்டங்களின் உயர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நோயைத் தடுக்கும் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதால் தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

கண்காணிப்பு நடவடிக்கைகள்

அதைத் தொடர்ந்து உருமாறிய சி 1.2 கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர், இந்த வகை வைரசைத் தடுக்க தமிழ்நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சர்வதேச விமான நிலையத்தில் ஆய்வுக்காக தெர்மல் ஸ்கிரீனிங் பொறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்வதற்கான ஆய்வகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகளை 13 நிமிடங்களில் தெரிவிக்கும் இயந்திரமும் பொறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மீனம்பாக்கம் விமான நிலையத்தில்தான் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகள் மிகுந்த கவனத்தோடு நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

19 லட்சம் கூடுதல்

தடுப்பூசிகள்

தமிழ்நாட்டில் நேற்று இரவு வரை 3 கோடியே 50 லட்சத்து 20 ஆயிரத்து 70 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 6 லட்சத்து 20 ஆயிரத்து 255 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தப்பட்டது முதல் நேற்று தான் அதிக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து 19 லட்சத்து 22 ஆயிரத்து 80 கூடுதல் தடுப்பூசிகள் இன்று வர உள்ளன. ஏற்கனவே நம்மிடம் 14 லட்சத்து 47 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே மொத்தம் 33 லட்சம் தடுப்பூசிகளைத் தினந்தோறும் பொதுமக்களுக்கு செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தார்.

20 லட்சம் பேர் இலக்கு

மேலும் அமைச்சர் கூறுகையில் வரும் 12 ந் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைத்து அப்பணிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான பணிகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்கள், உயர் அலுவலர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே 12 ந் தேதி காலை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இந்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளேன் என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், கொரோனா 2 வது அலையில் இருந்தே குழந்தைகள் மீது கொரோனா வைரசின் தாக்கம் இருந்து வருகிறது. இருந்தாலும் கூட குழந்தைகளுக்கு இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் அது அவர்களைக் காக்கிறது. இதனால் உயிரிழப்பு எதுவும் இல்லை.

கடந்த 1 ந் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்தவுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஏற்கனவே பாதிப்புக்குள்ளானவர்கள் பள்ளிக்கு வரும் போது பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியபட்டது. எனவே பள்ளிகளைத் திறந்ததால்தான் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. இது சம்மந்தமான பள்ளிகளில் தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருவதால் அப்பள்ளிகள் தற்போது மூடப்பட்டுள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *