சென்னை, ஜன.6–
ஜனவரி 11–ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்கள் சந்திப்பில், அப்பாவு கூறியதாவது: இன்று சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடர் பற்றி முடிவெடுக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் மறைவுக்கு சட்டசபையில் நாளை (7–ந்தேதி) இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்.
அடுத்து 4 நாள்கள், அதாவது ஜனவரி 11–ந்தேதி வரை தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். கவர்னர் உரை மீதான விவாதம் 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும். 11–ம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து நிறைவு செய்வார்.
ஜனநாயக கடமையிலிருந்து கவர்னர் ரவி தவறிவிட்டார். தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக கவர்னர் ரவி செயல்படுவது நியாயமா? தொடர்ந்து 3வது ஆண்டாக கவர்னர் இது போன்று செய்து கொண்டிருக்கிறார். யார் சொன்னாலும் அவை மரபுகளை மாற்ற முடியாது. 3வது ஆண்டாக இதே பிரச்சினை தொடர்கிறது. அடுத்த ஆண்டும் கவர்னர் உரையின் போது, மரபுப்படியே சட்டசபை செயல்படும்.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுவதே மரபு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கவர்னர்களால் பிரச்சினை இருக்கிறதா? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தான் இது போன்று பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தயாரிக்கும் உரை தான் கவர்னரிடம் கொடுக்கப்படும். உரையை வாசிக்க விருப்பம் இல்லாமல் கவர்னர் சாக்கு போக்கு சொல்கிறார்.
சட்டசபைக்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கைகளில் பதாகைகளை வைத்திருந்தனர். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று கேட்டனர். அண்ணா பல்கலைக்கழக வேந்தராக கவர்னர் இருப்பதால், அவருக்கு எதிராக இந்த போராட்டம் செய்தார்களா? என்று எனக்கு தெரியவில்லை. கலவர நோக்கத்தோடு அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டதால் வெளியேற்றப்பட்டனர்.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.