செய்திகள்

11½ லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் மதிய உணவு செலவின தொகை உயர்வு: ஸ்டாலின் உத்தரவு

சென்னை, பிப்.1-

11½ லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில், மதிய உணவு செலவினத் தொகையை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவு செலவினத் தொகையை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, குழந்தைகள் மைய சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு, உணவு செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 (முன்பு ரூ.1.81) என உயர்த்தி வழங்கப்படுகிறது.

தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி, தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ.1.33 (முன்பு ரூ.1.10) எனவும், உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கான செலவினம் ரூ.0.46 (முன்பு ரூ.0.45) எனவும், எரிபொருளுக்கான செலவினம் ரூ.0.60 (முன்பு ரூ.0.26) எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, உணவு செலவினம் உயர்த்தி வழங்குவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.41.14 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையங்களிலுள்ள சத்துணவுத் திட்ட பயனாளிகளான 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள்.

இந்தத் தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *