செய்திகள்

பள்ளிக்கு சென்ற 10–ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா: பள்ளி மூடல்

சேலம், ஜன. 21

சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பள்ளி மூடப்பட்டது.

தமிழகம் முழுவதும் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ந்தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரிய கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளிக்கு சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

முன்னதாக, அவனுக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் கொரானா பரிசோதனைக்கு மாதிரிகளை கொடுத்துவிட்டு மாணவர் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மாணவனுக்கு கொரானா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பள்ளி 10 நாட்களுக்கு மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த மாணவன் விடுதியில் தங்கியிருந்ததால் அவனுடன் தொடர்பில் இருந்த சக மாணவர்களை தனிமைப்படுத்த மாவட்ட சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *