போஸ்டர் செய்தி

குறுக்கு வழியில் ஆட்சியை கவிழ்க்க முடியாது : ஸ்டாலினுக்கு எடப்பாடி கடும் எச்சரிக்கை

சென்னை, ஜன.12–

உள்ளாட்சி தேர்தல் ரத்துக்கு தி.மு.க. தான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கிராம சபை கூட்டம் என ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார் என்றும் முதலமைச்சர் கடுமையாக தாக்கினார்.

கொடநாடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவல்களை பரப்புகின்றார் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை அண்ணா திமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் ஏற்பாடுகள், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அனைத்து ஊடக நண்பர்களுக்கும் , பத்திரிகை நண்பர்களுக்கும் என்னுடைய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் என்பவர் நேற்று டெல்லியில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் .

இப்படத்தில், “கொடநாடு எஸ்டேட்டில் 2017ம் ஆண்டு ஏப்ரல் 24தேதி நடைபெற்ற ஒரு சம்பவத்தில் என்னை சம்மந்தப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு மாறனாது, துளியும் உண்மையில்லை. இந்த செய்திகளை வெளியிட்டவர்கள் மீதும் மற்றும் இதற்கு பின்புலமாக இருந்தவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

வழக்கு பதிவு

இது சம்பந்தமாக நேற்றைய தினமே சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள். கொடநாடு எஸ்டேட்டில் 24.4.2017 ல் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் குற்றவாளிகள் இதுவரை நீதிமன்றத்திற்கு 22 முறை சென்று வந்துள்ளனர். நீதி மன்றத்தில் ஏதுவும் சொல்லாதவர்கள் தற்போது புதிதாக ஒரு செய்தியைச் சொல்லி வழக்கை திசை திருப்ப பார்க்கிறார்கள் . வருகின்ற பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது . இவர்களுக்குபின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பதை விரைவில் கண்டறியப்படுவார்கள் என இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் .

அதுமட்டுமல்ல இந்த குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. போக்சோ சட்டத்திலும் , ஆள்மாறாட்ட வழக்கிலும் , சீட்டிங் செய்தல், திருட்டு வழக்கிலும், கூலிப்படை வழக்கிலும் , இப்படி பல்வேறு வழக்குகளில் இந்த குற்றவாளிகள் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் செய்தி வெளியிடுகின்ற போது , ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றார்கள்.

அதாவது, அம்மா கட்சி நிர்வாகிகள் இடத்தில் ஆவணங்களைப் பெற்று கொடநாட்டில் வைத்துள்ளதாகவும் அதை எடுப்பதற்காக இவர்கள் சென்றதாகவும் அந்த வீடியோவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மா எந்த ஒரு நிர்வாகியிடத்திலும் எந்த ஆவணத்தையும் எப்பொழுதும் பெற்றது கிடையாது. அம்மாவுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செய்திகள் வெளியிட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது .

அம்மாவைப் பொறுத்தவரைக்கும் கட்சி நிர்வாகிகளை தங்கள் குடும்ப உறுப்பினராக பாவிக்கக் கூடியவர். அனைவரிடமும், கட்சியினரிடத்தில் அன்பாக பழகக்கூடியவர். அவர்களுக்கு தேவையான பதவிகளை வழங்கி அழகு பார்க்கக்கூடியவர்.

அவர் மீது இப்படிப்பட்ட களங்கத்தை கற்பித்தது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது மற்றும் தி.மு.க. பொறுத்த வரைக்கும் ஏதாவது ஒரு வழக்கு போட்டு கொண்டே இருக்கிறார்கள். ஒப்பந்த முறைகேடு நடைபெற்றது என்று என் மீது வழக்கு போட்டார்கள் . பிறகு உச்சநீதிமன்றம் போய் அது நிலுவையில் இருக்கிறது.

வழக்கு போடுவது தான் ஸ்டாலின் வேலை

பிறகு, அம்மா, எம்.ஜி.ஆர். வழியில் வந்த இந்த அரசு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசு திட்டத்தை அறிவித்தோம் . அதிலும் அவரது கட்சியை சேர்ந்தவரே நீதிமன்றத்தில் வழக்கு தொடரச் செய்தார்கள். பிறகு தமிழகத்தில் தொழில் வளம் பெருக வேண்டும் என்பதற்காக உலக முதளீட்டாளார் மாநாட்டை நடத்த வேண்டும் என்பதற்காக, வருகிற ஜனவரி 23, 24ம் தேதி நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்பதற்காக அதற்கும் வழக்கு போட்டுள்ளார்கள்.

ஒருபுறம் தொழிற்சாலை வரவில்லை என்கிறார்கள், மறுபுறம் தொழிற்சாலை வருவதையும் தடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆக, அண்ணா தி.மு.க. அரசு எந்த திட்டத்தையும் தமிழகத்தில் கொண்டு வரக்கூடாது என்ற அடிப்படையில் தொடர்ந்து வழக்கு தொடுப்பதுதான் இவரது வேலை என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். .

இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு யார் யார் எல்லாம் இருப்பார் என்பதை கண்டறிந்து, இந்த நிகழ்வுக்கு பின்புலமாக யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் ரத்து: தி.மு.க. காரணம்

அது மட்டுமல்லாமல், அண்ணா தி.மு.க. அரசு தான் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்துள்ளது என்ற தவறான குற்றச்சாட்டை எல்லா பகுதிகளிலும் ஊடகங்களிலும் தெரிவித்து வருகிறார்கள்.

இப்போது அவர் நடத்துகின்ற கிராம சபை கூட்டத்திலும் இதே கருத்தைத் தான் சொல்லிக்கொண்டுள்ளார். உண்மையிலேயே புரட்சித்தலைவி அம்மாவால் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு அந்த பணிகள் எல்லாம் துவங்கி நடைபெற்ற கால கட்டத்தில், இவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த உள்ளாட்சி மன்ற தேர்தலை ரத்து செய்தவர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான். உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். அதனுடைய செயல்தலைவராக இருந்து அவர் எடுத்த முயற்சியினால் தான் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைத்தார்கள்.

கிராம சபை கூட்டம் என அறிவித்து எல்லா இடத்திற்கும் இவர் சென்று கொண்டிருக்கிறார். இதில் என்ன வேடிக்கை எனில், இவர் துணை முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தார். உள்ளாட்சி துறை அமைச்சர் வேலையே கிராமம், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதுதான் அவருடைய பணி, அதற்கு அமைச்சராக இருந்தவரும் மு.க.ஸ்டாலின் தான். ஆனால் அப்போதெல்லாம் இந்த பணியை செய்ய தவறிவிட்டார்.

குடி தண்ணீர் கொடுக்க, சாலை வசதி, மின்சார வசதி இப்படி மக்களுக்கு அடிப்படை தேவையை செய்கின்ற ஒரு பொறுப்பிலே அவர் இருந்தார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது அதை செய்யாமல் தவற விட்டுவிட்டு இப்போது கிராமத்திற்கு சென்று, கிராமத்தில் குடிநீர் இல்லை, சாலை இல்லை, மின்சாரம் இல்லை என்றால், இதையெல்லாம் செய்வதற்குத்தான் உங்களது ஆட்சியில் உங்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பு கொடுத்தார்கள்.

அடிப்படை தேவைகளை நிறைவேற்றுகிறோம்

அந்தக் கால கட்டத்தில் எதுவும் செய்யாத காரணத்தினால் தான் இன்றைக்கு அம்மாவினுடைய அரசு அந்த பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. எந்த இடத்திலும் குறைபாடுகள் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் நானாக இருக்கட்டும், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதிக்கு சென்று அடிப்படை தேவைகள் என்ன என்பதை ஆராய்ந்து உடனுக்குடன் அதனை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

என்னுடைய மாவட்டத்திலே கூட கடந்த மாதம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் வரவழைத்து எல்லா பகுதிகளுக்கும் போய் என்னென்ன தேவைகள் என்பதை அறிந்து நிறைவேற்ற வேண்டும் என்ற ஆணை பிறப்பித்து அந்த பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு ஒன்றியங்களுக்கு ஒரு துணை ஆட்சியரை நியமித்துள்ளோம். அந்த துணை ஆட்சியர் அந்த இரண்டு ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு சென்று அந்த ஊராட்சிகளில் என்னென்ன பிரச்சனைகள் என்பதை கண்டறிந்து அவற்றை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின் நாடகம்

கிட்டத்தட்ட 99 சதவீத மின்சார விளக்குகள் இன்று நல்ல முறையில் எரிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் என்னுடைய மாவட்டத்திற்கு சென்று பிரச்சனைகளை ஆராய்ந்து பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறேன். அதேபோல அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் தங்களுடைய மாவட்டங்களுக்குச் சென்று பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார்கள். இவர் ஏதோ புதுசா போய் இப்போதுதான் பிரச்சனைகளை தீர்க்கின்ற மாதிரி தோற்றத்தை ஏற்படுத்துகிறார். இதெல்லாம் அரசியல் காரணமாக போடுகின்ற நாடகம், மூன்று வருஷமாக போய் கிராமசபை கூட்டத்தை கூட்டாமல், இப்போது மட்டும் என்ன ஞானோதயம் வந்தது? இதெல்லாம் அரசியலுக்காக செய்கின்ற நாடகம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *