சிறுகதை

1098 – ராஜா செல்லமுத்து

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த அரசுப் பள்ளி.

அப்பள்ளிக் கூட ஆசிரியர்கள் எல்லோரும் அவரவர் வகுப்பில் ரொம்ப ஆர்வமாகவும் ஆக்ரோஷமாகவும் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது அந்த அரசுப் பள்ளி.

மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக ஒரு போலீஸ் ஜீப் வந்து அந்தப் பள்ளிக் கூடத்தில் நின்றது.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதற்காக நம் பள்ளிக்கு போலீஸ் ஜீப் வந்து இருக்கிறது? என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

ஜீப்பில் இருந்து கீழே இறங்கி இன்ஸ்பெக்டர் தலைமை ஆசிரியர் அலுவலகத்தை நோக்கி நடந்தார்.

அதுவரையில் வகுப்பறையில் பாடம் நடத்தும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

இப்போது போலீஸ் வந்ததற்கான முணுமுணுப்பு மட்டும் கேட்க ஆரம்பித்தது.

தலைமையாசிரியர் அறைக்குள் நுழைந்த இன்ஸ்பெக்டரை அங்கிருந்த மாணவன் ‘சார் கிளாஸில் இருக்காங்க’ என்றானர்.

‘நான் உங்க ஹெட்மாஸ்டரப் பார்க்கணும். அவரை வரச் சொல்லுங்க’ என்றார் இன்ஸ்பெக்டர்.

தலைமை ஆசிரியருக்குத் தகவல் பறந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் இன்ஸ்பெக்டரை தலைமையாசிரியர் வரவேற்றார்.

‘வாங்க சார் வாங்க. உக்காருங்க’ என்று தன்னுடைய இருக்கைக்கு எதிராக இருக்கும் இருக்கையைக் காட்டினார்.

அதுவரை தலையில் அணிந்திருந்த தொப்பியை எடுக்காத அந்த இன்ஸ்பெக்டர் தலைமையாசிரியருக்கு முன்னால் அமரும் போது தன் தொப்பியைக் கழட்டிவிட்டு அவர் காட்டிய சேரில் அமர்ந்தார்.

‘சார் என்ன விஷயம்? சொல்லுங்க…..’ என்றார் தலைமையாசிரியர்.

‘ஒன்னும் இல்ல சார். இந்த ஸ்கூல்ல படிக்கிற பத்தாவது பொண்ணுக்கு கட்டாய திருமணம் நடத்துறதா எங்களுக்கு ஒரு போன் வந்தது. அதுதான் உங்களை என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு போகலாம்னு வந்தோம்’ என்றார் இன்ஸ்பெக்டர்.

‘அப்படியெல்லாம் எதுவும் இருக்காது சார்’ என்றார் தலைமையாசிரியர்.

‘எங்களுக்கு அந்தப் பொண்ணப் பார்க்கணும். வந்த ஃபோன் கால் அது உண்மையானதா என செக் பண்ணனும்’ என்றார் இன்ஸ்பெக்டர்.

‘ஓகே…. தாராளமா’ என்றார் தலைமையாசிரியர்.

‘பொண்ணு பெயர் என்ன?’ என்று தலைமையாசிரியரிடம் கேட்க….. ‘விமலா’ என்றார் இன்ஸ்பெக்டர்.

‘பத்தாவது படிக்கிற பொண்ணுக்கு தான் இந்தக் கட்டாயக் கல்யாணம் செய்வதாகச் சொல்கிறார்கள்’ என்று இன்ஸ்பெக்டர் சொல்ல,

‘சார் நான் இப்பவே விமலாவை வரச் சொல்றேன்’ என்றவர், பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் விமலாவை அவர் வகுப்பிலிருந்து அழைத்துவர உத்தரவிட்டார்.

அவள் படிக்கும் வகுப்பிற்குப் போன ஆசிரியர், அவள் இல்லாததைக் கண்டு குழப்பத்தில் திரும்பி வந்தார்.

‘என்ன சார் என்ன ஆச்சு?’ என்று தலைமையாசிரியர் கேட்டபோது

‘இல்ல சார் அந்தப் பொண்ணு இன்னைக்கு ஸ்கூலுக்கு வரல’ என்றார் அந்த ஆசிரியர்.

மறுபடியும் தன் கையில் இருந்த தொப்பியை எடுத்து தலையில் அணிந்த இன்ஸ்பெக்டர் இப்போது எழுந்து நின்றார்.

‘ஏன் சார் நாடகமாடுகிறீங்க? நீங்களே அந்தப் பொண்ணுக்கு வழிகாட்டி. அந்தப் பொண்ணு ஸ்கூல்ல இருந்து அனுப்பிவிட்டு தெரியாத மாதிரி இருக்கீங்களே?’ என்று கொஞ்சம் கடுமையாகக் கேட்டார் இன்ஸ்பெக்டர்.

‘சார் நீங்க நினைப்பது மாதிரி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. இது ஒரு கிராமம் யாரை எங்கே எப்படி இருக்காங்க அப்படிங்கற விஷயமே எங்களுக்குத் தெரியாது. குழந்தைகள் பத்தாவது படிக்கிற பிள்ளைங்க அட்டன்டன்ஸ் அந்த வாத்தியாருக்குத் தான் தெரியும். எனக்கு தெரியாது சார்’ என்றார் தலைமையாசிரியர்.

‘ஓகே விமலா எந்த ஊரு? அட்ரஸ் கொடுங்க. அதோட அவ படிக்கிற சர்டிபிகேட் எனக்கு வேண்டும்’ என்றார் இன்ஸ்பெக்டர்.

‘இல்ல எப்படித் தர முடியும் சார்?’ என்று கேட்க…..

‘என்ன விளையாடுறீங்களா? எனக்கு ஒரு போன் வந்திருக்கிறது. அது உண்மையான செக் பண்ணனும். நீங்க ஒரிஜினல் சர்டிபிகேட் தர வேண்டாம். அதன் மாதிரி கொடுத்தா போதும். அதுபோல விமலா உடைய அட்ரஸ் கொடுங்க’ என்றார் இன்ஸ்பெக்டர்.

தலைமை ஆசிரியரும் ‘சரி இப்ப நான் ஏற்பாடு பண்றேன்’ என்று சிறிது நேரத்திற்கெல்லாம் விமலாவின் முகவரி, அவள் படிப்பதற்கான சான்றிதழ் இரண்டையும் கையில் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு விமலாவின் முகவரிக்கு விரைந்தார் இன்ஸ்பெக்டர்.

அங்கே விமலா வீட்டில் அவளுக்கு திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத விமலாவின் குடும்பத்தினர் போலீஸ் வருவதைக் கண்டு திகைத்து நின்றார்கள்.

‘என்ன அப்படிப் பாக்குறீங்க.? 15 வயசு பொண்ணுக்கு கல்யாணம் பண்ண பாக்கறீங்களா? இது தப்பு. இதுக்கு மேல நீங்க பண்ணுனீங்க உங்கள அரஸ்ட் பண்ண வேண்டியிருக்கும். என் கையில அந்தப் பொண்ணு படிப்பதற்கான சான்றிதழ் எல்லாமே என்கிட்ட எவிடன்ஸ் இருக்கு’ என்றார் இன்ஸ்பெக்டர்.

15 வயதுக்கு மீறிய உடலமைப்பும் அவருடைய உயரமும் இருந்ததால் அவர்கள் தங்கள் மகளின் வயதைக் கூட்டிச் சொல்ல முயற்சித்தார்கள். ஆனால் அத்தனையும் பொய் என்று சொன்னார் இன்ஸ்பெக்டர்.

குடும்பத்துடன் வாதாடும் இன்ஸ்பெக்டரின் செயலைக் கண்டு ரொம்பவே சந்தோஷப்பட்டார் விமலா.

எப்படியும் தனக்கு இப்போது கல்யாணம் நடக்கப் போவதில்லை தான் படித்து முன்னுக்கு வரவேண்டும். இன்னும் பெரிய சாதனைகளை செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்த விமலாவுக்கு இன்ஸ்பெக்டரின் பேச்சு ரொம்பவே சந்தோஷப்பட வைத்தது.

இன்ஸ்பெக்டரின் பேச்சால் திருமணம் நின்று போனது. ‘இதுக்கு மீறி இந்தப் பொண்ணுக்கு திருமணம் செய்து வைக்க நினைச்சீங்கன்னா? தூக்கி உள்ள போட்டுருவேன்’ என்று எச்சரித்துவிட்டுச் சென்றார் இன்ஸ்பெக்டர்.

மறுநாள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார் விமலா.

அதற்கு முன்பாகவே விமலாவின் குடும்பத்தினர் அந்தப் பள்ளியில் முற்றுகையிட்டு இருந்தனர்.

‘என் மகளை கல்யாணம் பண்ணி கொடுக்கிறோம்; என்னமோ பண்றோம் ; அதுக்கு நீ ஏன் போலீசுக்கு போன் பண்ணி சொல்லி இருக்க? உன்னை என்ன பண்றேன் பாரு’ என்று தலைமை ஆசிரியரை முற்றுகையிட்ட விமலாவின் உறவினர்கள் தலைமையாசிரியருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

எதுவும் தெரியாத தலைமையாசிரியர்

‘இங்க பாருங்க எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இப்ப நீங்க யாரு எங்க வேணாலும் நீங்க தகவல் கொடுக்க முடியும். நான் சொல்லல வேற யார் சொன்னாங்கனு பாருங்க’ என்று அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அத்தனையும் மீறி அந்த தலைமை ஆசிரியரை அடிக்கத்தான் முறுக்கிக் கொண்டு வந்தார்கள் விமலாவின் உறவினர்கள்.

அரசாங்க ஊழியரை அடித்தால் விளைவு விபரீதமாக இருக்கும் என்று அங்கிருப்பவர்கள் சொல்ல, வாய்ப் பேச்சும் கைபேச்சுமாய் அந்த தலைமை ஆசிரியரை திட்டிக் கொண்டிருந்தார்கள் உறவினர்கள்.

‘நடந்தது நடந்து போச்சு. இனிப் பேசி பிரயோஜனம் இல்லை. மறுபடி ஒரு பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம்’ என்று விமலாவின் குடும்பத்தினர் அந்தப் பள்ளியை விட்டு வெளியேறினார்கள்.

அப்போதுதான் அந்தப் பள்ளியின் சுவற்றில் எழுதியிருந்த தொலைபேசி எண்ணைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.

பாலியல் பிரச்சினைகள், பெண் குழந்தைகள் சம்பந்தமான பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் 1098 என்ற நம்பருக்குப் போன் செய்தால் உங்களுக்குப் பலன் கிடைக்கும் என்று தலைமையாசிரியர் எழுதி போட்டிருந்தது பார்த்துவிட்டு, அவரை முறைத்தார்கள்.

‘இது எல்லாருக்கும்தான். உங்கள் குழந்தைக்கு மட்டும் இல்ல. யாரும் தங்களுடைய பிரச்சனைகளை தாராளமா சொல்லலாம். அதுக்குத்தான் இதை எழுதிப் போட்டு இருக்கேன்.

ஏன் உங்க பொண்ணு கூட 1098 க்கு போன் பண்ணி சொல்லி இருக்கலாம் இல்லையா? முதல்ல உங்க பொண்ண விசாரிங்க’ என்றபோது

அவள் வகுப்பறையில் சிரித்துக் கொண்டே பாடங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

இதைப் பார்த்த உறவினர்கள் எதுவும் பேசாமல் அந்தப் பள்ளியை விட்டு நகர்ந்தார்கள்.

1098 என்ற எண், ஒரு பெண்ணின் வாழ்வைக் காப்பாற்றியிருக்கிறது. இன்னும் நிறையப் பெண்களின் பிரச்சினைகளை காப்பாற்றும் என்ற சந்தோஷத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் தலைமையாசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *