* அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
* நடத்தை வழிமுறைகள் பற்றி தெளிவான விளக்கம்
சென்னை, மார்ச் 19–
சென்னை மாவட்டத்தில் பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையிலான “”நான் வாக்களிக்கத் தயாராக உள்ளேன்”, “என் வாக்கு, என் உரிமை” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தன்படம் (Selfie Point) எடுக்கும் வகையிலான பதாகையில் நின்று புகைப்படம் எடுத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.
மேலும், “நான் வாக்களிக்க ஆவலுடன் உள்ளேன்”, “என் வாக்கு, என் உரிமை!” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கையெழுத்துப் பலகையில் கையெழுத்திட்டு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 19.4.2024 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த 16–ந் தேதி அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் அலுவலரும், ஆணையாளருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது:–
வேட்புமனுத்தாக்கல் நாளை (20–ந் தேதி) முதல் 27–ந் தேதி வரை நடைபெறும். வேட்புமனு பரிசீலனை 28–ந் தேதி அன்றும், வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் 30–ந் தேதி அன்றும், வாக்குப்பதிவு நாள் 19.4.2024 மற்றும் வாக்கு எண்ணிக்கை 4.6.2024 அன்றும் நடைபெற உள்ளது.
அச்சுறுத்தல், ஆள்மாறாட்டம்
தேர்தலில் வாக்குகளைப் பெற வாக்காளர்களுக்கு கையூட்டு வழங்குவதோ, வாக்காளர்கள் வாக்களிக்க கையூட்டு பெறுவது ஆகியவை தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரான செயலாகும். இதுபோன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டால் இந்திய தண்டனைச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வாக்காளர்களை அச்சுறுத்துதல், ஆள்மாறாட்டம் செய்தல், தேர்தல் பரப்புரைக்கான நிறைவு நேரத்தில் இருந்து, வாக்குப்பதிவு முடிவறும் வரையிலான 48 மணி நேரத்திற்குள் பொதுக்கூட்டங்கள் நடத்துதல், வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீ. சுற்றெல்லைக்குள் தங்களது வாக்களிக்குமாறு கோருதல் ஆகியவை தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரான முறைகேடான செயல். மேலும், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வரவும், வாக்கு செலுத்திய பின்னர் திரும்ப அழைத்துச் செல்லவும் வாகன வசதிகளை ஏற்படுத்தித் தருதல் தவிர்க்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.
பிற அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை ஏற்படுத்த முனைதல், பிற கட்சிக் கூட்டங்களில் தனது கட்சி ஆதரவாளர்களைக் கொண்டு கேள்வி எழுப்புவதன் மூலமும், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்வதன் மூலமும் தொல்லை கொடுத்தல், பிற கட்சிப் பேரணிகள் நடைபெறும் பாதை வழியாக அடுத்த கட்சியினர் பேரணியை நடத்த முற்படுதல், ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளை மற்றொரு கட்சியின் தொண்டர்கள் கிழித்து எறிதல் ஆகிய செயல்களில் ஈடுபடக் கூடாது.
வெறுப்பு, பதட்டம்
உருவாக்கக்கூடாது
பல்வேறு சாதி, இனம், மதம், மொழியை சார்ந்த மக்களிடையே வேறுபாடுகளை தீவிரமாக்கும் வகையிலான செயலிலோ, ஒருவருக்கொருவர் இடையில் வெறுப்பை உருவாக்கும் வண்ணம் அல்லது பதற்றத்திற்கு வழி செய்யும் எந்த செயலிலும் எந்த ஒரு கட்சியோ, வேட்பாளரோ ஈடுபடக்கூடாது. இன மற்றும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் வேண்டுகோள்கள் விடுக்கக்கூடாது. தேர்தல் பிரச்சார களமாக மசூதி, தேவாலயம் மற்றும் கோவில் போன்ற வழிபாட்டுத் தளங்கள் பயன்படுத்தப்படக் கூடாது.
தேர்தல் செலவு கண்காணிப்பு
தேர்தலின்போது, ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு ஒருநாள் முன்பிருந்து, தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் வரை புதிய வங்கிக் கணக்கினைப் பராமரிக்கவேண்டும். ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் ரூ.95 லட்சம் வரை செலவழித்திட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. வேட்பாளர் இவ்வரம்பிற்கு உட்பட்டே தேர்தல் செலவுகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் முடிவுகள் வெளியிட்ட 30 நாட்களுக்குள் தங்கள் செலவுக் கணக்கினை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் இந்திய தேர்தல் நடத்தை விதிகளின்படி, தகுதி நீக்கம் செய்யப்பட வழிவகை உண்டு.
வங்கிக் கணக்கானது வேட்பாளர் பெயரிலோ அல்லது அவரது முகவருடன் இணைந்தோ ஜாயின்ட் அக்கவுண்டாக தொடங்கப்பட வேண்டும். வேட்பாளரால் செலவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தொகை, இந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பின்னரே செலவு செய்யப்பட வேண்டும். செலவு செய்யப்படும் தொகையானது காசோலையாகவே செலுத்தப்பட வேண்டும். காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை ரூ.10 ஆயிரத்து-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
போக்குவரத்து விதிகளை
கடைப்பிடிக்கப்பட வேண்டும்
அனைத்து போக்குவரத்து விதிகளும், கட்டுப்பாடுகளும் கவனமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாவண்ணம் முன்கூட்டியே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர்வலம் செல்லும்போது ஊர்வலத்திற்கு வலதுபுறம் போதுமான இடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பணியிலிருக்கும் காவலர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளின்படி தவறாது நடந்து கொள்ள வேண்டும்.
ஒரே பாதையில் ஒன்றிற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்ய விரும்பினால் எவ்வித மோதல்களும் ஏற்படாவண்ணம் முன்கூட்டியே முடிவுசெய்து கொள்ள வேண்டும். இருதரப்பினரும் திருப்திகரமாக ஏற்பாடு செய்வதற்காக உள்ளூர் காவல்துறையின் உதவியை நாடி பெறலாம். ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் தங்கள் கையில் கொண்டு செல்லும் பொருட்களை தவறாக பயன்படுத்தாவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிற அரசியல் கட்சிகளையோ, பிற தலைவர்களையோ உருவகப்படுத்தும் உருவப் பொம்மைகளை எடுத்துச் செல்வதோ, எரிப்பதோ, பிற வகையான போராட்டங்கள் நடத்துவதோ கூடாது.
வாக்குப்பதிவு நாள்
வாக்குச்சாவடியில் பணிபுரியும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் தொண்டர்களுக்கு, அவர்கள் சார்ந்த கட்சியின் பெயர் மற்றும் வேட்பாளரின் பெயர் குறிப்பிட்ட அடையாள வில்லைகள் வழங்கப்பட வேண்டும். வாக்குச்சாவடிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரக் கடிதம் அல்லது அனுமதிச் சீட்டு இன்றி வாக்குச்சாடிக்குள் நுழைய எவருக்கும் அனுமதி இல்லை.
வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது அளிக்கும் சுயஉறுதிமொழி ஆவணத்தில் தனது சமூக வலைதள கணக்கு (கூகுள், டுவிட்டர், பேஸ்புக்) பற்றிய விவரங்கள் அளிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அளிக்கப்படும் அரசியல் விளம்பரங்கள் முன் அனுமதி பெற்றதாக இருக்க வேண்டும். தேர்தல் பரப்புரை மற்றும் சமூக வலைதளங்களில் செய்யப்படும் விளம்பரங்களுக்குண்டான செலவுத் தொகையினை தேர்தல் செலவுக் கணக்கில் காண்பிக்கப்பட வேண்டும்.
அரசியல் கட்சியினை சார்ந்த இறந்துபோன தலைவர்களின் சிலையினை மறைத்திட வேண்டியதில்லை. ஆனால் அவர்களின் சிலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி சின்னங்கள், கல்வெட்டுகள கட்டாயம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களில் தேசியக் கொடியினை பயன்படுத்த அனுமதி இல்லை. பொது இடங்களில் கட்சிக் கொடிகள், கொடிக் கம்பங்கள், கல்வெட்டுகள் இருக்கக் கூடாது. அவற்றை உடனடியாக அகற்றிக் கொள்ள சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
கட்சி விளம்பரங்கள்,
கொடிகளை அகற்றி
அரசியல் கட்சி விளம்பரங்கள், தட்டிகள், போர்டுகள், கொடிகள், கம்பங்கள் உள்ளிட்ட பிற இனங்கள் அகற்றப்பட்டமைக்கான அறிக்கையினை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் சட்டம் 1959, பிரிவு 2ன்படி, பொதுமக்களின் பார்வைக்குரிய பகுதி என்பது தனியார் இடங்கள், கட்டடங்கள், தனிநபர்கள் பார்க்கக்கூடிய அல்லது அதன் வழியே கடந்து செல்லத்தக்க பொது இடங்கள் ஆகும்.
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தனியார் சுவர்களின் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை. அந்த இடத்தின் உரிமையாளர் அனுமதி பெற்று இருந்தாலும், சுவம் விளம்பரம் எழுதுதல், போஸ்டர்கள் ஒட்டுதல் போன்ற செயல்களைக் செய்யக் கூடாது. சொந்த இடத்தில் பேனர்கள், கொடிகள் கட்டி விளம்பரம் செய்தல், தனியார் வாகனங்களில் வாக்காளர்களை கவரும் வகையில் கட்சிக் கொடி, தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்ள அனுமதியில்லை. இவ்வகையில் பேனர்கள், கொடிகள் கட்டி விளம்பரம் செய்வதன் மூலம் தனிப்பட்ட வாக்காளர்களை கவரும் நிலை ஏற்பட்டால் அது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 171Hன்படி நடவடிக்கைக்குட்பட்டது. தவறுசெய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
தற்காலிக பிரச்சார அலுவலகங்களை அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்தோ, வாக்குச்சாவடியிலிருந்து 200 மீ. பகுதிக்குள்ளோ அமைத்தல் கூடாது. இத்தற்காலிக அலுவலகங்களில் ஒரே ஒரு கட்சி கொடியினை, ஒரு கட்சி பதாகை போட்டோவை வைத்துக் கொள்ளலாம். மேற்படி அனுமதிக்கப்பட்ட பேனர் அளவு 4 x 8 ஆகும்.
வாகனங்கள் பயன்படுத்தும் முறை
முழுத் தொகுதிக்கும் தனது சொந்த உபயோகத்திற்கு ஒரு வாகனமும், முழுத் தொகுதிக்கும் தனது முகவர் ஒரு வாகனமும் பயன்படுத்தலாம். மேலும், வேட்பாளரின் முகவர், தொண்டர்கள் எவரேனும் மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா ஒரு வாகனம் பயன்படுத்தலாம். வேட்புமனுத்தாக்கல் செய்யும் நிகழ்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு.
வேட்பாளரின் வாகனத்துடன் கூட வரும் வாகனங்களில் பயணிப்போரின் தேர்தல் நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்படும். பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்படும் வீடியோ வாகனங்களுக்குண்டான அனுமதியினை அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ தேர்தல் ஆணையத்திடமிருந்து கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அனுமதி ஆணை முன்புறமாக பார்வைக்கு ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் சைக்கிள் ரிக்சாவும் வேட்பாளரின் செலவினத்தில் கணக்கில் கொள்ளப்படும். வேட்பாளரின் சார்பில் அவருக்கு வாக்கு கோரி பயன்படுத்தப்படும் வீடியோ வாகனத்தின் செலவானது வேட்பாளரின் செலவினத்தில் கணக்கில் கொள்ளப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் தனக்காகவும், முகவருக்காகவும் மற்றும் கட்சி நடவடிக்கைக்கும் கூடுதலாக 2 வாகனங்களை மட்டும் முன்அனுமதி பெற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட அனுமதி ஆணையின் அசல் வாகனத்தின் முன் முகப்புப் பகுதியில் கட்டாயம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அனுமதி பெறாத வாகனங்களை பிரச்சார நடவடிக்கைகளில் பயன்படுத்திட அனுமதியில்லை. 4 சக்கர வாகனங்களைத் தவிர பிற அமைப்புள்ள வாகனங்களை கட்சி வேட்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதியில்லை. அனுமதிக்கப்பட்ட வாகனங்களிலும் ஓட்டுநர் உள்பட 5 நபர்கள் மட்டும் பயணிக்க அனுமதியுண்டு. அதற்கு மேல் பயணிக்கக்கூடாது. மேற்கண்ட நடைமுறைகள் இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்.
நடத்தை விதிகள்
மத்திய அமைச்சர்களோ, மாநில அமைச்சர்களோ அலுவல் ரீதியாக தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிக்கு வந்து செல்லவும், நடத்தை விதிகள் அமுலுக்கு உள்ள காலங்களில் அமைச்சர்கள் எவரும் தேர்தல் நடத்தும் பணியில் உள்ள அலுவலர்களை அழைப்பதற்கோ அல்லது அவரது அலுவலகத்திற்கு வரச் சொல்லவோ அல்லது அரசு விருந்தினர் மாளிகைக்கு வரச் சொல்லவோ கூடாது.
அமைச்சர்கள் எவரேனும் வேட்புமனுத்தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டாலோ அல்லது தேர்தல் முன்னிட்டு தொகுதிக்குள் வந்து சென்றாலோ அவை அலுவலக ரீதியாக கருத்தில் கொள்ளப்படமாட்டாது. தேர்தல் ரீதியாக கருத்தில் கொள்ளப்படும். அலுவலகப் பணி ரீதியாக அமைச்சர்கள் வருகை தரும் நிகழ்வுகளில் தொகுதிக்குள் தங்க அனுமதியில்லை. தேர்தல் பணி ஏதும் அவர் கவனிக்கக்கூடாது.
நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள பொழுது, காவல் பாதுகாப்பு பைலட் வண்டி அல்லது சைரன் வண்டி ஏதும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. அமைச்சர்கள், சேர்மன், வாரிய உறுப்பினர்கள் அரசு வாகனங்களைப் பயன்படுத்திட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பிரச்சாரத்திற்கு வருகைபுரியும்போது தங்களது தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், தங்களது உதவிக்காக நியமிக்கப்பட்ட அரசு அலுவலர்களை கூட அழைத்து வருவதற்கோ அல்லது அவர்களின் உதவியினை பெற்றுக் கொள்ளவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சட்டம், ஒழுங்கு பராமரித்தல்
எதிர்பாராத நிகழ்வுகளான சட்டம், ஒழுங்கு பராமரித்தல், பேரிடர் நிகழ்வுகள் அல்லது அவசர நெருக்கடி நிலைமைகளில் அரசு வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் தடையேதுமில்லை. உயிர் அச்சுறுத்தலுக்குள்ளான மத்திய அல்லது மாநில அமைச்சர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட பாதுகாப்புப் படை பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பெண்களின் கௌரவம் மற்றும் கண்ணியத்திற்கு கேடு விளைவிக்கும் எந்தவொரு செயல்பாடுகள், சொற்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
உண்மைக்கு மாறான மற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய விளம்பரங்களை ஊடகங்களுக்கு கொடுக்கக்கூடாது. செய்திகள் போல போலியான விளம்பரங்களை கொடுக்கக்கூடாது. போட்டியாளர்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக ஊடகப்பதிவுகள் அல்லது மோசமான அல்லது கண்ணியத்திற்கு குறைவான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிடவோ அல்லது பகிரவோ கூடாது.
இவ்வாறு தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
ஆர்.லலிதா, ஜெயசந்திர பானுரெட்டி
இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஆர்.லலிதா, டாக்டர் வி.ஜெய சந்திர பானு ரெட்டி, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இணை ஆணையாளர் ஷரண்யா அறி, வட்டார துணை ஆணையாளர்கள் எம்.பி. அமித், கே.ஜெ.பிரவீன் குமார், கட்டா ரவி தேஜா, வருவாய் அலுவலர் (தேர்தல்) ச.சுரேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.