தெலங்கானா அரசு அதிரடி அரசாணை
ஐதராபாத், ஜூலை 5–
தெலங்கானாவில் 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து எம்பிபிஎஸ் சீட்டுகளையும் உள்ளூர் மாணவர்களுக்கே ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதன் மூலம், ஆண்டுக்கு கூடுதலாக 1,820 எம்பிபிஎஸ் சீட்டுகள் தெலங்கானா மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநில மருத்துவ சேர்க்கை விதிமுறையின்படி, மருத்துவக் கல்லூரிகளில் உள்ளூர் இடஒதுக்கீட்டில் 85 சதவிகித சீட்டுகள் தெலுங்கானா மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மருத்துவ சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளூர் இடஒதுக்கீட்டில் 100 சதவிகித எம்பிபிஎஸ் சீட்டுகளையும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கி நேற்று தெலங்கானா அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தெலங்கானா மாணவர்களுக்கே
தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முன்னதாக தொடங்கப்பட்ட தனியார் மற்றும் அரசு சார்பான 20 மருத்துவக் கல்லூரிகளில் 2,850 எம்பிபிஎஸ் சீட்டுகள் உள்ளன. இதில், 1,895 சீட்டுகள் உள்ளூர் இடஒதுக்கீட்டின் கீழ் இருக்கும் நிலையில், அதில் 15 சதவிகித சீட்டுகளை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பொது இடஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்டு வந்தன. இதில், பெரும்பாலான சீட்டுகள் தெலங்கானா மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தெலங்கானாவில் தனியார் மற்றும் அரசு சார்பில் தொடங்கப்பட்ட 36 புதிய மருத்துவ கல்லூரிகளில் உள்ளூர் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள 100 சதவிகித எம்பிபிஎஸ் சீட்டுகளையும் தெலங்கானா மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தெலங்கானா மாநிலத்தில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5,490 எம்பிபிஎஸ் சீட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 15 சதவீத பொது ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம் 1820 எம்பிபிஎஸ் சீட்டுகள் தெலங்கானா மாணவர்களுக்கே கிடைக்கும் என்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.