தலையங்கம்
புது டெல்லியில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இந்தியா விரைவில் ஒரு பில்லியன் (நூறு கோடி) வாக்காளர்களை கொண்ட நாடாக மாறவுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் இந்தியா, உலகளாவிய ஜனநாயகங்களில் மிகப்பெரிய ஒன்றாக உயர்ந்து விடும்.
2024 ஆம் ஆண்டு உலகத்தின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஜனநாயகத் தேர்தல்களில் நேரடியாக பங்கேற்ற ஆண்டாக இருந்ததை கண்டோம். அதே ஆண்டில் இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக, தன்னுடைய வலிமையான வாக்காளர்கள் பட்டியலால் முன்னணியில் இருந்தது. சென்ற ஆண்டில் எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த தேர்தல்களில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. வாக்குப்பதிவு சதவிகிதம், மக்களின் பங்கேற்பு , குறிப்பாக பெண்களின் பங்கேற்பு ஆகியவை சிறப்பாக இருந்தன என்று ராஜீவ் குமார் பெருமிதத்துடன கூறினார்.
இந்திய வாக்காளர்கள் பட்டியல் முழுமையாக திருத்தம் செய்யப்பட்டதை அடுத்து, வாக்காளர்கள் எண்ணிக்கை 99 கோடி என உயர்ந்தது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சிறப்பு சுருக்க திருத்தப் பட்டியல் (SSR) வெளியிடப்பட்டவுடன், இந்தியா 99 கோடி வாக்காளர்களை தாண்டும் என்றார் தேர்தல் ஆணையர்.
“இது ஒருபோதும் இல்லாத சாதனை. நாங்கள் விரைவில் ஒரு பில்லியன் வாக்காளர்கள் கொண்ட நாடாக மாறவிருக்கிறோம் என்று பெருமையாக தெரிவித்தார். இதில் 48 கோடி வாக்காளர்கள் பெண்கள் எனபதும் குறிப்பிடதக்கது.
இந்திய ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் துல்லியமான வாக்காளர்கள் பட்டியல் மிக அவசியமான ஒன்று. இது இந்திய அரசியலமைப்பு 324 ஆம் பிரிவும் மக்கள் பிரதிநிதிகள் சட்டம், 1950 ஆவது சட்டமும் வகுத்துத் தருகிறது. தேர்தல் ஆணையம், தகுதி உள்ள ஒவ்வொரு நபரின் பெயரும் தவறாமல் சேர்க்கப்பட வேண்டும் என உறுதியாக செயல்பட்டு வருகிறது. “துல்லியமான, வெளிப்படையாக தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் இல்லாமல் சுதந்திரமான, நியாயமான, நம்பகமான தேர்தல்களை நடத்த இயலாது என்றும் ராஜீவ் குமார் கூறினார்.
48 கோடி பெண்கள்
48 கோடி பெண்கள் வாக்காளர்களாக இருப்பது, இந்திய தேர்தல் முறையின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. 2024 ஆம் ஆண்டு சிறப்பாக நடந்து முடிந்த பொதுத் தேர்தல், உலக அரங்கில் இந்தியாவின் மக்களாட்சியின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டியது. தேர்தல் ஆணையத்தின் சிறப்பான பணிகள், அசராத உழைப்பு மிகப்பெரிய மக்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதுடன் புதிய தலைமுறைக்கு நல்ல முன் உதாரணமாகவும் இருக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் இத்தருணத்தில் அதன் சிறப்புக்கு மணிமகுடம் சேர்ப்பது போல் நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. எனினும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்த பிறகுதான் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது.
2025 ல் அவை நிஜமாகி நம் ஜனநாயக பயணத்திற்கு புது வழிகாட்டியாய் இருக்க வேண்டும். மேலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான வழிமுறைகள் உருவாக்கப்பட்டும் வருகிறது.