போஸ்டர் செய்தி

10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் பற்றி இன்று மாலை முடிவு

சென்னை, ஏப். 20

தர்மபுரி, கடலூர், திருவள்ளூர் தொகுதிகளில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து இன்று மாலைக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறினார்.

தர்மபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளிலும், கடலூர், திருவள்ளூர் தொகுதிகளில் தலா 1 வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. இது தொடர்பான புகார் மனுக்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட 3 தொகுதிகளிலும் சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:

தருமபுரி, கடலூர், திருவள்ளூர் தொகுதிகளை சேர்ந்த 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த கோரிக்கை வந்துள்ளது. இதையடுத்து கோரிக்கை எழுந்துள்ள வாக்குச்சாவடிகளில், மறுவாக்குப்பதிவு நடத்தலாமா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆய்வு செய்து அறிக்கை தர பணிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான வன்முறை, வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி, கள்ள ஓட்டுக்கள் போட முயற்சி உள்ளிட்ட சம்பவங்களை காரணமாக கூறி குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரியுள்ளனர். எனவே இன்று மாலைக்குள் தேர்தல் அதிகாரிகள் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையளிக்க உள்ளனர். அவர்களின் இறுதி அறிக்கை கிடைத்த பிறகு தருமபுரி, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட தொகுதிகளில் புகார் எழுந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது பற்றிய முடிவு மாலைக்குள் அறிவிக்கப்படும்.

கலவரம் ஏற்பட்ட பொன்பரப்பியில் மறுதேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை

இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி விசாரணை

தேர்தலில் வாக்குப்பதிவின்போது ரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வியாழன் அன்று நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார். இந்த தேர்தலில் ரஜினிகாந்த் வாக்களித்தபோது அவருக்கு வலதுகையில் மை வைக்கப்பட்டது சர்ச்சையாகி இருக்கிறது. தேர்தல் நடைமுறை விதிகளின்படி வாக்களிப்பவரின் இடது கை ஆள் காட்டி விரலில் தான் மை வைக்கப்பட வேண்டும். இடது கை விரலில் காயம் என்றாலோ மை வைக்க முடியாத சூழ்நிலை என்றாலோ அதற்கு அடுத்த விரலில் மை வைக்கப்படவேண்டும். ஒருவேளை இடது கையில் மை வைக்க முடியாதபட்சத்தில் தான் வலது கையில் மை வைக்கப்படவேண்டும்.

ரஜினிகாந்த் வாக்களிக்கும்போது அவருக்கு மை வைத்த அலுவலர் பதட்டத்தில் அவரது வலது கையில் மை வைத்துவிட்டதாக தெரிகிறது. கடந்த 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நடிகர் அஜித்துக்கு ஆள்காட்டி விரலுக்கு பதிலாக நடுவிரலில் மை வைக்கப்பட்டு விட்டது. அதை மீடியாவுக்கு முன்னால் காட்டக்கூடாது என்று கையின் நான்கு விரல்களையும் சேர்த்து காண்பித்தார். அதுபோன்ற ஒரு தர்மசங்கடம் ரஜினிக்கும் அவருக்கு மை வைத்த அலுவலருக்கும் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. முன்னணி நடிகர் என்பதால் அலுவலர் பதட்டத்தில் செய்தாரா? இதற்கு எப்படி ரஜினி சம்மதித்தார்? இது விதிமீறலில் வராதா? இது போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த சத்யபிரதா சாகு கூறியதாவது:

தேர்தல் பணியில் இருந்த ஊழியர்கள், தவறுதலாக ரஜினிகாந்தின் வலது கைவிரலில் அடையாள மையை வைத்திருக்கலாம். ரஜினி ஓட்டு போட வரும்போது பத்திரிகையாளர்கள் உள்பட பெருங்கூட்டம் கூடியதால் அவசரத்தில் தேர்தல் அதிகாரி இடது கைவிரலுக்கு பதில் வலது கைவிரலில் மை வைத்திருக்கலாம். பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் தவறு செய்தது தொடர்பாக அறிக்கை கேட்கப்படும். மேலும், அதிக ரசிகர்களுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு ரஜினிகாந்த் வந்ததாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அறிக்கை கேட்கப்படும்.

அதேபோல் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறப்பு விதியின்படி வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது குறித்தும் அறிக்கை கேட்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *