செய்திகள்

10–ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்

Spread the love

10–ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான பிறகே

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

 

ஈரோடு, மே 23–

10ம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வௌியான பிறகே அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். மீறினால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, இன்று ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை செய்து, 21 ஊராட்சிகளுக்கு லைசால், கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார்.

அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊடரங்கு காலத்தில் ஏழை, எளியோரின் வாழ்வாதாரத்திற்கு பல்வேறு வகையில் நிவாரண பொருட்களை வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில், பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பால், தண்ணீர் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வௌியான பிறகே அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதற்கு முன்பாக தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகள் துவங்கும் முன்பே தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தலைவர் கே.கே.காளியப்பன், கோபி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கே.பி.மௌதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *