செய்திகள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி, பிளஸ்- 2 தேர்வு மார்ச் 13-ந்தேதி தொடங்குகிறது

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு

சென்னை, நவ.8-–

தமிழகத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு மார்ச் 13-ந் தேதியும், 10–-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6–-ந் தேதியும் தொடங்குகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் கூறினார்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம், ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகளை நடத்தி வருகிறது. வழக்கமாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகள் தொடங்கும். கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மே மாதம் தேர்வு நடத்தப்பட்டது.

இதன்காரணமாக உயர்கல்வி மாணவர் சேர்க்கையும் அடுத்தடுத்து தள்ளிப்போனது. இந்தநிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு பட்டியலை சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேற்று வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–-

தமிழகத்தில் 2022–-2023–-ம் கல்வியாண்டிற்கான 10-–ம் வகுப்பு, பிளஸ் -1, பிளஸ் -2 பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு (2023) மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது.

இப்பொதுத்தேர்வுகளில் 27.30 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் -2 பொதுத்தேர்வு வருகிற மார்ச் 13–-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3-–ந் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை 8.80 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

இதேபோல் பிளஸ்- 1 பொதுத்தேர்வு மார்ச் 14-–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 5–-ந் தேதி முடிவடையும். இத்தேர்வை 8½ லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

அதேபோல் 10–-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6–-ந் தேதி தொடங்கி 20-ந்–தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை 10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த தேர்வு காலை 10 மணியில் இருந்து 10.10 மணி வரை வினாத்தாள் படிக்கவும், 10.10 முதல் 10.15 மணி வரை விவரங்கள் சரிபார்க்கப்படுகிறது. தொடர்ந்து 10.15 மணியில் இருந்து பகல் 1.15 மணி வரை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் 3–-வது வாரம் நிறைவடைகிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் சார்பாகவும், பள்ளிக்கல்வித்துறை சார்பாகவும் வாழ்த்துகள். பொதுத்தேர்வை மாணவர்கள் நல்லபடியாக எழுத வேண்டும். பொதுத்தேர்வு பயம் இருக்கக்கூடாது. ஆசிரியர்கள் கற்றுத்தந்ததை உள்வாங்கிக் கொண்டு பயம் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் இப்போதிலிருந்தே தயாராக வேண்டும். வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். பெற்றோர்கள் மாணவர்களுக்கு அழுத்தம் தராமல், ஊக்கப்படுத்த வேண்டும்.

பொதுத்தேர்வை எழுதுவதற்கான நல்ல சூழலை மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஏற்படுத்தி தரவேண்டும். பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் புதிதாக மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை. நடப்பு கல்வியாண்டு முழு பாடத்திட்டத்தின்படியே பொதுத்தேர்வு நடத்தப்படும். ஆசிரியர்கள் பொதுத்தேர்வு மாணவர்களுக்கான பாடத்தை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடும்போதே, தேர்வு முடிவு வெளியிடும் தேதியும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தேர்வு முடிவு குறித்த தேதி அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்கக உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வு முடிந்து ஒரு மாதத்துக்குள் வெளியிட திட்டமிட்டு உள்ளோம். தேர்வு நெருங்கும்போது, தேர்வு முடிவுகள் வெளியீடு தேதி முறையாக அறிவிக்கப்படும்’ என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *