வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் நடவடிக்கை
விழுப்புரம், ஜூலை 25–-
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சாராயம் மற்றும் கஞ்சா வியாபாரிகள் 466 பேரின் வங்கி கணக்கை முடக்கம் செய்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்தவர்களில் 67 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை முற்றிலும் தடுக்கும் வகையில், அதை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்வோர்கள் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும் சாராயம், கஞ்சா வியாபாரிகள் மற்றும் கள்ளச்சாராய வருமானத்தின் மூலம் வாழும் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்கை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்பேரில் கடலூர் மாவட்டத்தில் 71 பேர் மீதும், விழுப்புரம் மாவட்டத்தில் 98 பேர் மீதும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13 பேர் மீதும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 21 பேர் மீதும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 56 பேர் மீதும், திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பேர், வேலூர் மாவட்டத்தில் 33 பேர், ராணிபேட்டை மாவட்டத்தில் 44 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 41 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 77 பேர் ஆக மொத்தம் 466 பேரின் வங்கி கணக்கை முடக்கி வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.