சென்னை, ஏப்.12-
காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.19.50 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதி கட்டப்படும்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை மாணவிகளுக்கு இரண்டு விடுதிகள் கட்டப்படும்.
அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் 13 ஆயிரத்து 75 ச.மீ பரப்பில் தரைத்தளம் மற்றும் மூன்று அடுக்குகளுடன் கூடிய நவீன விடுதி கட்டப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய விடுதி கட்டப்படும். பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் மகளிர் விடுதி கட்டப்படும்.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொண்டி வளாகத்தில் கடல்சார் விளையாட்டு மையம் அமைக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முயற்சிகளை அதிகரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் டிட்கோ, சிப்காட் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து 11 மையங்கள் நிறுவப்படும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தொழில்திறன்களை மேம்படுத்த புதிய பாடப்பரிவு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் ரூ.6 கோடி நிதியுதவியுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படும்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு பணிபுரிந்து கொண்டே பொறியியல் பட்டம் பயிலுவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகளில் பொறியியல் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிமுகப்படுத்தப்படும். முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழிற்சாலைகளுடன் இணைந்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆராய்ச்சி பூங்கா நிறுவப்படும்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறைக்கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும்.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்து உள்ளது.
10 புதிய அரசு கலை
அறிவியல் கல்லூரி
அரசு கல்லூரிகளின் தேவை அதிகரித்து உள்ளதால் திருச்சி மாவட்டம் மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம், கடலூர் மாவட்டம் வடலூர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் ரூ.166.50 கோடி மதிப்பீட்டில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.