செய்திகள்

10 ஆண்டில் 53 கோடி ‘ஜன் தன்’ வங்கி கணக்குகள் துவக்கம்

Makkal Kural Official

புதுடெல்லி, ஆக. 28–

பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு துவக்கி வைத்த ‘ஜன் தன் யோஜனா’ திட்டத்தின்கீழ் இதுவரை 53 கோடி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் ரூ.2.3 லட்சம் கோடி அளவிற்கு பணம் டெபாசிட் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா என்பது, அடிப்படை சேமிப்பு மற்றும் வைப்பு கணக்குகள், பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, ஓய்வூதியம் போன்ற நிதிச்சேவைகளை உறுதி செய்வதற்கான தேசிய திட்டம். இதுவரை, வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் வங்கிக் கணக்கினை துவங்குவதற்கு நல்லதொரு முகாந்திரமாக இத்திட்டம் இருந்து வருகிறது. கடந்த 2014 ஆகஸ்ட் 28ம் தேதி, ஜன் தன் யோஜனா திட்டத்தினை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

திட்டம் துவங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இதுவரை 53 கோடிக்கும் மேற்பட்ட ஜன் தன் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் சுமார் ரூ.2.3 லட்சம் கோடி அளவிற்கான பணம் டெபாசிட் ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 53 கோடி கணக்குகளில் பெண்கள் மட்டும் 30 கோடிக்கும் மேற்பட்டவர்கள் அடங்கியுள்ளனர்.

இதனை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ”இன்று ஜன்தன் யோஜனா திட்டம் துவங்கி, 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இத்திட்டம் வெற்றியடைய உழைத்த அனைத்து பயனாளிகளுக்கும் பாராட்டுகள். ஜன்தன் யோஜனா திட்டம், கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதில் முதன்மையானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *