செய்திகள்

1 1/2 லட்சம் லிட்டர் ஆக்சிஜன் பயன்படுத்தியதற்கு 10 மரங்கள் நடுங்கள்: மருத்துவமனை கோரிக்கை

நாக்பூர், ஏப். 27–

ஒரு வாரத்தில் 1 1/2 லட்சம் லிட்டர் ஆக்சிஜனை கொரோனா நோயாளி பயன்படுத்தியதற்கு, 10 மரங்களையாவது நட வேண்டும் என்று மருத்துவமனை கோரிக்கை வைத்துள்ளது.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருப்பதால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நாக்பூரிலுள்ள ‘கெட் வெல்’ மருத்துவமனையில் 41 வயதுடைய பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு வாரம் முழுவதும் ஐசியு-வில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

10 மரங்களாவது நடுங்கள்

பின்னர் அவர் குணமடைந்து வீடு திரும்பும் முன், மருத்துவர்கள் அவரிடம், உங்கள் சிகிச்சையின் போது நீங்கள் 1,44,000 லிட்டர் ஆக்சிஜனை உபயோகித்துள்ளீர்கள். அதனை ஈடுகட்ட, குறைந்தது 10 மரங்களாவது நட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், மருத்துவர்கள் கூறியது போல் இந்த ஆண்டில் நான் 10 மரங்களுக்கும் அதிகமாகவே நட வேண்டும் என்று உறுதி எடுத்துள்ளேன். சுற்றுச்சூழலின் முக்கியத்துவமும் ஆக்சிஜனின் தேவையையும் கொரோனா வைரஸ் எனக்கு நன்றாக உணர்த்தியுள்ளது என்றார்.

இதனையடுத்து பலரும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில், ஆக்சிஜனின் முக்கியத்துவத்தை இந்த கொரோனா நோய்த்தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது. எனவே அனைவரும் தங்களால் முடிந்த வரை மரங்களை நட்டு இயற்கையைக் காப்போம் என்று பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *