சென்னை, மார்ச்.13-
1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ–மாணவிகளுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 8ந் தேதி தொடங்கி 24ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
பிளஸ்–2 மற்றும் பிளஸ்–1 வகுப்பு மாணவ–மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து 10ம் வகுப்புக்கு வருகிற 28ந் தேதி பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 2024–25ம் கல்வியாண்டுக்கான முழு ஆண்டுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.
அந்த வகையில் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 9ந் தேதி தொடங்கி 21ந் தேதி வரையிலும், 1, 2 மற்றும் 3-ம் வகுப்புகளுக்கு 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையிலும் முழு ஆண்டுத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதில் 1, 2 மற்றும் 3-ம் வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது.
இதேபோல் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ–மாணவிகளுக்கு அடுத்த மாதம் 8–ந் தேதி தொடங்கி 24–ந்தேதி வரையில் முழு ஆண்டுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதில் 6, 7-ம் வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், 8 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் தேர்வு நடக்கும். 8 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு இறுதி தேர்வான சமூக அறிவியல் தேர்வு மட்டும் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும் நடைபெறும்.