செய்திகள்

1 கோடியே 60 லட்சம் அமெரிக்க மக்களை அபாயத்தில் தள்ளும் டிரம்ப்: ஒபாமா எதிர்ப்பு

Makkal Kural Official

வாஷிங்டன், ஜூலை 3–

மெடிக்எய்டு திட்டத்திற்கான நிதியை, குறைக்கும் வகையிலான மசோதாவை டிரம்ப் நிர்வாகம் நிறைவேறினால், 1 கோடியே 60 லட்சம் அமெரிக்கர்கள் அபாயத்தில் தள்ளப்படுவார்கள் என்று முன்னாள் அதிபர் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ள புதிய மசோதா, மெடிக்எய்டு (Medicaid) எனப்படும் மருத்துவ உதவி திட்டத்திற்கு அரசு வழங்கும் நிதியைக் குறைப்பதோடு, முந்தைய ஒபாமா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை (Affordable Care Act) பலவீனப்படுத்துவதாக உள்ளது. எனவே, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்ட புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டார்.

இது குறித்து பராக் ஒபாமா கூறி இருப்பதாவது:–

இந்த மசோதா நிறைவேறினால், சுமார் 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் மருத்துவ காப்பீட்டை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.ட்ரம்பின் குடியரசுக் கட்சி, சமீபத்தில் அறிமுகப்படுத்திய வரி குறைப்பு நடவடிக்கைகளால் அரசுக்கு ஏற்பட்ட பணப் பற்றாக்குறையை சமாளிக்க, மெடிக்எய்டு (Medicaid) திட்டத்திற்கான நிதியை குறைக்க இந்த மசோதாவை முன்மொழிந்துள்ளது.

மருத்துவ உரிமையை பறிக்கும்

மெடிக்எய்டு (Medicaid) என்பது, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் ஒரு முக்கிய திட்டமாகும். இந்த மசோதா, மருத்துவமனை செலவுகள், மருந்துகள் மற்றும் பிற மருத்துவ சேவைகளுக்கு உதவி பெறும் மக்களை நேரடியாக பாதிக்கும். ஒபாமா, இந்த மசோதா மக்களின் அடிப்படை மருத்துவ உரிமைகளை பறிக்கும் என்று கடுமையாக விமர்சித்தார்.

மலிவு விலை பராமரிப்புச் சட்டம், ஒபாமாவின் ஆட்சியில் (2010) கொண்டுவரப்பட்ட ஒரு முக்கிய சட்டமாகும். இது கோடிக்கணக்கான அமெரிக்கர்களுக்கு மலிவு விலையில் மருத்துவ காப்பீடு வழங்கி, சுகாதார அமைப்பை மேம்படுத்தியது. ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் இந்த சட்டத்தை பலவீனப்படுத்த முயல்வதாக ஒபாமா குற்றம்சாட்டினார்.

மெடிக்எய்டு (Medicaid) நிதி குறைப்பு, இந்த சட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களுக்கு மருத்துவ சேவைகளை அணுகுவதை கடினமாக்கும் என்றும் ஒபாமா எச்சரித்தார். இது, குறிப்பாக ஏழை மற்றும் புலம்பெயர்ந்த மக்களை பெரிதும் பாதிக்கும் என்று அவர் கூறினார். இந்த மசோதா, அமெரிக்காவில் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *