போஸ்டர் செய்தி

‘‘ நான் மீண்டும் அதிபரானால் விளைவுகள் மோசமாக இருக்கும்’’: சீனாவுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

வாஷிங்டன், மே.13–

‘அமெரிக்காவுடன் சீனா இப்போதே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால், அடுத்து வரும் 2020–ம் ஆண்டில் நான் 2–வது முறையாக ஆட்சியமைத்த பிறகு சீனாவிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்வேன்’ என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.

சீனா தனது வர்த்தக ஒப்பந்த வாக்குறுதிகளை மீறியுள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ள அதிபர் ட்ரம்ப், இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:–

‘‘சீனாவுடன் அண்மையில் நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தையில், நான் கடுமையாக நடந்து கொள்வதாக சீன அரசு கருதலாம். ஆனால், அடுத்த (2020) ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் நான் மீண்டும் வெற்றி பெற்றால், சீனாவிடம் இன்னும் அதிகக் கடுமையாக நடந்து கொள்வேன். எனவே, அவர்கள் புத்திசாலித்தனமாக இப்போதே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளவேண்டும்.

தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றால் சீனாவுக்கு அதிர்ஷ்டம். மீண்டும் அமெரிக்காவிலிருந்து 500 பில்லி யன் டாலரை சுருட்டிக்கொண்டு போக முடியும். இல்லையென்றால், அடுத்ததாக ஆட்சிக்கு வரும் நான், ஆண்டுக்கு 50,000 கோடி டாலர் (சுமார் ரூ.35 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பேன்.

அந்த வரிச் சுமையிலிருந்து சீனா தப்ப வேண்டுமென்றால், அவர்களது தயாரிப்புகளை அமெரிக்காவில் தயாரிக்க வேண்டும்’’.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதிக் கொள்கைகளால் அமெரிக்க நலன்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி வரும் டிரம்ப், அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தார்.

சீனாவும், அதற்குப் பதிலடியாக அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்தது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் பதற்றம் அதிகரித்து வந்தது. எனினும், அந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு தரப்பினரும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றர்.

ரூ.14 லட்சம் கோடி இறக்குமதிப் பொருட்கள்

இந்த நிலையில், வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால், 20,000 கோடி டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) மதிப்பிலான சீன இறக்குமதிப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப் போவதாக கடந்த வாரம் டிரம்ப் அறிவித்தார்.

அவ்வாறு கூடுதல் வரி விதித்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று சீன வர்த்தகத் துறை அமைச்சகம் எச்சரித்திருந்தும், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு கடந்த 10–ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடியாக, சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர் அளவிலான வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *