தலையங்கம்
கடந்த ஆண்டு பணவீக்கம் உலகெங்கும் விலை ஏற்றத்தை கொண்டு வந்தது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றங்களால் வாகன சேவை கட்டணம் உயர்ந்தது. அதன் பாதிப்பு எல்லா துறைகளிலும் உணர முடிந்தது.
மிக மிதமான வளர்ச்சியை கண்ட கட்டுமான துறையிலும், ரியல் எஸ்டேட் துறைகளிலும் விலை ஏற்றம் காரணங்களாலும், சாமானியனால் நிலம், வீடுகளில் முதலீடு செய்ய முடியாது தள்ளி நின்று கொண்டு இருப்பதை கண்டோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், அது ரியல் எஸ்டேட் துறையிலும் சமீபமாக மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது.
2023–ல் பொருளாதாரம் மெல்ல மீண்டு, நிமிர்ந்து நடைபோட ஆரம்பிக்கும் சாத்தியக்கூறுகள் தென்பட ஆரம்பித்து வருகிறது.
அப்படி ஓர் நல்லகாலம் ஆரம்பிக்கும் கட்டத்தில் செலவுகளை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் நுகர்வோர் முழு வீச்சில் செலவுகளை செய்ய தயக்கம் காட்டமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டு வாடகைகள் அதிகரிக்க முடியாத நிலை மாறி வாடகைகள் அதிகரிக்க ஆரம்பித்தால் பண நடமாட்டம் அதிகரிக்க, பொருளாதாரம் ஸ்திரமாகும்.
ஆனால் இப்படிப்பட்ட சிறு வளர்ச்சிகள் பொருளாதாரத்தை புது உயரத்திற்கு கொண்டு செல்ல முடியாது.
இனி வருங்கால பொருளாதார சவால்களை சமாளிக்க மிகப்பெரிய வருவாய் ஈர்க்கும் துறைகள் தேவைப்படுகிறது. நம் நாடெங்கும் தேவைப்படும் மின்சார பேட்டரிகள் தயாரிப்பு, பசுமைமய ஹைட்ரஜன் தயாரிப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பை தருகிறது.
புதுப்பிக்கப்படக்கூடிய (Renewable) எரிசக்தியிலிருந்து ஹைட்ரஜன் உற்பத்திக்கு மத்திய அரசு ரூ.17,490 கோடி முதலீடுகள் செய்ய இருப்பதாக சென்ற ஆண்டே அறிவித்து இருந்தது நினைவிருக்கலாம்.
அடுத்த சில ஆண்டுகளில் இம்முதலீடுகள் காரணமாக வர இருக்கும் புதிய தலைமுறை மின் உற்பத்தி சாத்திய கூறுகள் உலகமே எதிர்பார்க்கும் ஒன்றாகும்.
சிமெண்ட், போக்குவரத்து, வாகன உற்பத்தி என பல்வேறு துறைகளில் அவசியம் தேவைப்படும் எரிசக்திக்கு எரிபொருளாய் ஹைட்ரஜன் உபயோகத்திற்கு வந்தால் சுற்றுச்சூழல் மாசு தூசு சமாச்சாரங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளும். கார்பன் உமிழ்வை அறவே நிறுத்தி விடும்.
இதர நிலக்கரி போன்ற எரிபொருட்களின் செலவீனமும் அதிகமாக இருப்பதை முற்றிலும் உபயோகத்தில் இருந்து நீக்கி விடும் சூழ்நிலையில் சேமிப்பும் அதிகரிக்கும்!
இதுவரை உலக உபயோகத்தில் ஒரு சதவிகிதம் மட்டுமே சர்வதேச சந்தையில் கிடைக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய திட்டம் முழு வீச்சில் தயாரிப்பை துவங்கி விட்டால், நமது ஏற்றுமதி வருவாயும் பல மடங்கு உயர்ந்து செல்வ செழிப்பையும் வாரி வழங்கும்!
இப்படிப்பட்ட புதிய வருகையால் நம் தேசத்தில் முன்பு கணினி துறை ஏற்படுத்திய அனைத்து தரப்பு வளர்ச்சிகளுக்கு ஈடான ஏற்றத்தை தரும் வல்லமை ஹைட்ரஜன் எரிசக்தி உபயோகத்தில் இருப்பது தான் உண்மை.