இந்தியா கூட்டணி தலைவர்கள் கண்டனம்
ராஞ்சி, பிப். 01–
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது அரசியல் பழிவாங்கல் என்றும் பாரதீய ஜனதா கட்சியுடன் அமலாக்கத்துறை கூட்டணி வைத்துள்ளது என்றும் அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன்மீது, அமலாக்கத்துறை கடந்த 2022 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது. வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை 9 முறை சம்மன்களை அனுப்பியிருந்தது.
இதற்கிடையில், கடந்த 20 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்த போதிலும் ஆய்வு மேற்கொண்டதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் விமர்சித்தனர்.
இந்த சூழ்நிலையில் நேற்றிரவு ஹேம்ந்த் சோரன் கைது செய்யப்பட்டார். அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய ஆளுநரை சந்தித்தபோது அவருடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றிருந்தனர். கடிதம் வழங்கப்பட்ட உடனேயே அவர் கைது செய்யப்பட்டார். இவருடைய கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
தலைவர்கள் கண்டனம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே கூறுகையில், “பி.எம்.எல்.ஏ.வின் விதிகளை கொடூரமானதாக ஆக்கி எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுவது பாரதீய ஜனதாவின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும். சதியின் ஒரு பகுதியாக எதிர்கட்சி அரசுகளை ஒவ்வொன்றாக சீர்குலைக்கும் பா.ஜ.க.வின் வேலை தொடர்கிறது” என கூறி இருந்தார்.
ராகுல் காந்தி, “அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் வருமான வரித்துறை (IT) துறை போன்ற ஒன்றிய அரசு நிறுவனங்கள் அரசு நிறுவனங்களாக இருக்கவில்லை. அவை ‘எதிர்க்கட்சிகளை ஒழிக்கும்’ பாஜகவின் நிறுவனங்களாக ஐக்கியமாகிவிட்டன. ஊழலில் மூழ்கியிருக்கும் பாஜக, அதிகார வெறியில் ஜனநாயகத்தை அழிக்கும் பிரச்சாரத்தை நடத்துகிறது” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவின் ராஜ்யசபா எம்.பியான பிரியங்கா சதுர்வேதி உள்பட இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.