சிறுகதை

ஹெல்மெட்- ராஜா செல்லமுத்து


பூங்குன்றன் என்று அவனுக்கு பெயர் வைத்தாலும் வைத்தார்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உறவு முறையில் தான் பூங்குன்றன் வாழ்ந்து வந்தான்.

அவனுக்கு சுயநலம் என்பது குறைவு .பொதுநலம் மிகுதி..

அதற்காக அவன் பெயரில் இருக்கும் சொத்துக்களை எல்லாம் மற்றவர்களுக்கு எழுதி வைக்கும் அளவிற்கு பெரும் கொடையாளன் அல்ல.

தினமும் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்யும் அளவிற்கு வசதி படைத்தவனும் அல்ல .

சின்னச் சின்ன உதவிகள். சின்னச் சின்ன தொடர்புகள் என்று தனக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று அத்தனை பேருக்கும் உதவி செய்வான் .

அதனால் தான் அவன் வாயிலிருந்து உண்மையை தவிர வேறு ஒரு வார்த்தை வருவதில்லை.

மற்றவர்களுக்கு அவர்கள் பேசும் வார்த்தைகள் உண்மையாக இருக்கும். உண்மையாக தெரியும். ஆனால் அவர்கள் பேசும் வார்த்தை உண்மையா? பொய்யா ? என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

ஆனால் பூங்குன்றன் உண்மையைத் தவிர வேறு எந்த வார்த்தையும் உதிர்ப்பதில்லை .

தன்னுடைய அலுவலகத்திற்கு செல்லும் போதெல்லாம் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் யாரைவது ஒருவரை ஏற்றிக் கொண்டு தான் செல்வான்.

அவன் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் சுமார் 15 கிலோமீட்டர் இருக்கலாம் .

அந்த 15 கிலோமீட்டர் தூரத்திற்கு தன்னுடைய பின்னிருக்கை சும்மாதான் இருக்கிறதென்று அவன் யாரையாவது ஒருவரை வலியப் பேசி அவர்களைப் போகும்போது இறக்கிவிட்டு போவதுதான் வழக்கம் .

அதற்காக அவன் கட்டணம் வசூலிப்பது அல்லது பணம் கேட்பது கிடையாது .

அவன் பின்னாடி இருக்கும் சீட்டுக்கு தனியாக பெட்ரோல் செலவழிக்கவும் போவதில்லை. வறியவர்கள், பெரியவர்கள் பேருந்து கட்டணத்திற்கு பணம் இல்லாதவர்கள் என்று அவன் தேடி எல்லாம் பிடிப்பதில்லை .

அவன் கண்ணுக்கு நல்லவர்கள் என்று தெரியும் மனிதர்களை அவன் ஏற்றிக்கொண்டு போய் விடும் பழக்கத்தை வைத்திருந்தான்

ஆனால் தற்போது இருசக்கர வாகனத்தில் பின்னாடி இருப்பவர்களும் ஹெல்மெட் போட வேண்டும் என்ற நிலை வந்து விட்டது.

அவனால் உதவி செய்ய முன் வர முடியவில்லை .

ஒரு நாள் வழக்கம் போல் அவன் அலுவலகத்திற்கு போய்க்கொண்டு இருக்கும்போது ஒரு பெரியவர் கை நீட்டினார்

அவர் அருகே நின்ற பூங்குன்றன்

ஐயா எனக்கு ஹெல்மெட் இருக்கு. பின்னாடி உட்கார்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் போடணும்னு அரசாங்க சட்டம் போட்டு இருக்காங்க .

இப்போ உங்ககிட்ட ஹெல்மெட் இருந்தா மட்டும் தான் நான் உங்களை கூட்டிட்டு போக முடியும் இப்ப என்ன பண்றது? என்று சொல்ல

பரவாயில்லையா போலீஸ் பாக்குறதுக்கு முன்னாடி சந்து வழியா போயிடலாம் என்று அந்த பெரியவர் சொல்ல

அவரின் வார்த்தையை தட்டாத பூங்குன்றன்

சரி ஏறுங்க பார்க்கலாம் என்று அந்த பெரியவரை ஏற்றிக்கொண்டான்.

அவர் சொன்னபடியே சந்து பொந்துகளில் சென்று போய்க்கொண்டிருந்த பூங்குன்றனை ஒரு திருப்பத்தில் ஒரு போக்குவரத்து காவலர் மறித்தார் .

இறங்கு என்றார் சன்னமான குரலில் ‘

மாட்டிக் கொண்டாேம் என்று இழுத்தான் பூங்குன்றன்.

எடுங்க ஃபைன்

பெரியவர் விழித்தார்

பேசுவதற்கு வேறு வார்த்தை இல்லை வாதம் செய்வதற்கு அங்கு இடமில்லை

அரசாங்கத்தின் சட்டத்தை மீறக்கூடாது என்று நினைத்த பூங்குன்றன் ,அந்த பெரியவர்காக எவ்வளவு அபராத தொகை வந்ததோ அதே கொடுத்தான்.

அந்தப் பெரியவர் பூங்குன்றனிடம் மன்னிப்பு கேட்டார்.

ஐயா பரவால்ல. ஏறி உட்காருங்க என்று அந்த பெரியவரை ஏற்றிக்கொண்டு அலுவலகம் சென்றான்

அபராதத் தொகை விதிக்கப்பட்ட ரசீதை கையில் வைத்துக்கொண்டு அடுத்தடுத்த நிறுத்தங்களில் போக்குவரத்து காவலர்கள் ஹெல்மெட் இல்லை என்று கேட்டபோது அபராதம் செலுத்தியதற்கான ரசீதை காண்பித்தான் பூங்குன்றன் .

சரி நீங்க போகலாம் .சரி நீங்க போகலாம் என்று எல்லா நிறுத்தங்களிலும் இருந்து காவல்துறையினர் அவர்களை போக அனுமதித்தார்கள்

அந்தப் பெரியவருக்கு ஒன்றும் விளங்கவில்லை

தம்பி ஒன்னு கேட்டா தப்பா நினைப்பீங்களா? என்றார்.

‘ தம்பி தேவையில்லாம உங்களுக்கு நான் செலவு வச்சுட்டேங்க .மன்னிக்கணும் ஆனா ஒன்னு மட்டும் எனக்கு புரியல தம்பி.

என்னன்னு சொல்லுங்க .எனக்கு தெரிஞ்சா நான் சொல்றேன் என்றான், பூங்குன்றன்

ஹெல்மெட் போடுங்க .அது உங்கள் உயிருக்கு நல்லது. விபத்து ஏற்படாம இருக்கும் .அப்படின்னு சொல்றாங்க. நீங்கள் மட்டும் ஹெல்மெட் போட்டு இருக்கீங்க. இன்னும் நிறைய பேர் ஹெல்மெட் போடாம போறாங்க. உங்க பின்னாடி உட்கார்ந்து இருக்கிற நானும் ஹெல்மெட் போடல..அதுக்காக அவங்க அபராத தொகை கட்டியதற்கான ரசீது வாங்கியாச்சு. ஆனா அந்த அபராதத் தொகை கட்டண ரசீது காட்டவும் எல்லாம் நிறுத்தங்கள்ல இருக்கிற போலீஸ்காரங்க விட்டுட்டாங்க .அப்படின்னா ஹெல்மெட் உயிர் காக்குமா? அபராதத் தொகை கட்டண ரசீது உயிர்காக்குமா? இது தெரியலையே தம்பி

என்று அந்த பெரியவர் சொன்ன போது ,மிகவும் நுட்பமான அறிவு பூர்வமான கேள்வியை அந்தப் பெரியவர் கேட்டு இருக்கிறார் என்பது பூங்குன்றனுக்கு தெரிந்தது.

சரிதான் ஹெல்மெட் இல்லன்னா வண்டியிலிருந்து இறங்கி நடந்து போங்க. இல்ல கார்ல போங்க. பஸ்ல போங்கன்னு தான சொல்லணும் .அதுக்கு ஏன் அபராத விதிக்கணும்?அப்போ அபராதம் விதிச்சா விபத்து நடக்காம இருக்குமா? அப்போ பணம் வசூல் பண்றது மட்டும் தான் இந்த ஹெல்மெட் போடாத அவங்ககிட்ட அரசாங்க எடுக்கிற நடவடிக்கையா? அந்த பெரியவர் கேட்டது சரியான கேள்விதான் என்று நினைத்தான் பூங்குன்றன்

அவருடைய நிறுத்தத்தில் இறக்கிவிட்டான்.

ரொம்ப நன்றி என்று சொன்ன அந்தப் பெரியவர் .

அவருடைய வேலைக்கு சென்றார்.

அலுவலகம் செல்லும் வழி எல்லாம், அந்த பெரியவர் சொன்ன வார்த்தைகள் தான் பூங்குன்றனுக்குள் திரும்பத் திரும்ப அவனுக்கு வந்து கொண்டே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published.