டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை
சென்னை, டிச.16–
‘ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நடக்கும் விபத்துகளில், ஆண்டுக்கு, 40 சதவீதம் பேர், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதனால், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும், ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இது, 2015–ல் இருந்து கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் விதிமீறலுக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். எனினும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.கே.ராஜேந்திரன் என்பவர், ‘ஹெல்மெட் கட்டாயம் என்பதை அரசு முறையாக அமல்படுத்தவில்லை’ என்று, பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், ‘அரசு வெறும் உத்தரவு போட்டால் மட்டும் போதாது’ என, அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து, மாநிலம் முழுதும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதில் இருந்து அரசு விலக்கு அளித்து இருப்பதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.