செய்திகள்

ஹெலிகாப்டர் வசதியுடன் கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களுக்கு பாரத் கௌரவ்’ ரெயில்

Makkal Kural Official

ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம்

திருச்சி, ஜூன் 12–

கேதார்நாத் –- பத்ரிநாத் -– கார்த்திக் கோயில்களுக்குச் செல்ல ஐ.ஆர்.சி.டி.சி. ஹெலிகாப்டர் வசதியுடன் ‘பாரத் கௌரவ் ரயிலில் ஆன்மிக சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரெயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி.-யானது சுற்றுலாப் பயணிகளுக்கான பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. இதில், தங்குமிடம், உணவு, உள்ளூர் பயணங்களையும் (அதாவது ரயில் செல்லும் முக்கிய ஊரிலிருந்து வேன், பேரூந்து போன்ற வசதிகள்) ஐ.ஆர்.சி.டி.சி. யே கவனித்துக் கொண்டது. இந்த ஆண்டு சுற்றுலாப் பயணத்திட்டத்தில் மேற்கண்ட வசதிகளுடன் நாட்டிலேயே முதல்முறையாக ஹெலிகாப்டர் பயண வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி பிரஸ் கிளப்பில் ஐ.ஆர்.சி.டி.சி., தென் மண்டல குழு பொதுமேலாளர் பி. ராஜலிங்கம்பாசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த ஆண்டு பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் ஒரு சுற்றுலாப் பயணம் முடிவடைந்த நிலையில், உத்தரகண்ட் மாநில அரசின் சுற்றுலாத் துறையுடன் இணைந்து ஐ.ஆர்.சி.டி.சி. இரண்டாவது சுற்றுலாப் பயணத்தை ஜூன் 20 ஆம் தேதி மதுரையிலிருந்து தொடங்கவுள்ளது.

‘கேதார் –- பத்ரி – -கார்த்திக் (முருகன்) கோயில் யாத்திரை’ என்ற தலைப்பில் தொடங்கும் இந்தச் சுற்றுலாவுக்கு நிலையான கட்டணம் ரூ. 58,946, டீலக்ஸ் கட்டணம் ரூ. 62,535 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12 இரவுகள், 13 பகல்கள் கொண்ட இச்சுற்றுலாவில் 300 பயணிகள், கேதார்நாத், பத்ரிநாத், கார்த்திக், ஜோஸிமத் நரசிம்மர் கோயில், குப்தகாசி, ரிஷிகேஷ் ஆகிய ஆன்மிக தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். குப்தகாசியிலிருந்து கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர். இதற்குத் தனிக்கட்டணம் இல்லை.

முதலில் ருத்ரபிரயாக் சென்றதும் 100 பேர் வீதம் மூன்று குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவையும் ஒவ்வொரு பகுதிக்கு எங்களது சுற்றுலா மேலாளர்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவர். மிகவும் குறைந்த கட்டணத்தில் அனைத்து பயணச் செலவு, தங்குமிடம், உணவு வழங்கும் ஐ.ஆர்.சி.டி.சி.யின் திட்டமிட்ட சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு, சென்னை 82879 31968, மதுரை 82879 32122, திருச்சி 82879 320270 ஆகிய எண்களையும், இணையதளத்தையும் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *