செய்திகள்

ஹிஸ்புல்லா அமைப்பை முழுமையாக அழிக்கும் வரையில் போர் தொடரும்

Makkal Kural Official

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் மறுப்பு

லெபனான், செப். 28–

போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

காசா மீது மட்டுமின்றி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்த லெபனான், ஈரான் ஆகிய நாடுகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டு நெருங்கி வருகிறது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். மேலும், மாறி மாறி நடைபெற்று வரும் தாக்குதலில் இதுவரை அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், 21 நாள் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட பல நாடுகள் கேட்டுக் கொண்டனர்.

ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்த கோரிக்கைகளை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும், இனி செயல் தான் பேசும், வார்த்தை இல்லை எனவும், போர் நிறுத்தத்திற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நேற்று அமெரிக்காகவில் உள்ள நியூயோர்க்கில் 79-வது அமர்வு ஐ.நா.சபை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இஸ்ரேல்-லெபனான் போர் குறித்த விஷயங்களை பேசினார்கள். அதில், மீண்டும் இஸ்ரலுக்கு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது. அப்போது, அந்த ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொண்ட இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு பதிலளித்து கூறியதாவது:–

நெதன்யாகு மறுப்பு

“இந்த ஆண்டு இங்கு வருவேன் என நான் நினைக்கவில்லை. என் நாடு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த கூட்டத்தில் பல தலைவர்கள் என் நாட்டின் மீது சுமத்தப்பட்ட பொய்களையும் அவதூறுகளையும் கேட்டபிறகு, நான் இங்கு வந்து சரி செய்ய முடிவு செய்துள்ளேன். தலைவர்கள் கூறிய பொய்களை மறுக்கவே இங்கு வந்தேன்.

இஸ்ரேல் அமைதியையே விரும்புகிறது. ஆனால், ஈரானைப் பொருத்தமட்டும், எங்களை தாக்கினால், நாங்களும் தாக்குவோம். இனி வார்த்தை பேசாது; செயல் தான் பேசும். பல பிரச்சினைகளுக்கு பின்னால் ஈரான் இருக்கிறது. ஆனால், எங்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தும் எதிரிகளிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.

தினம் தோறும் எங்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்துவதை சகித்துக் கொண்டிருக்க முடியாது. ஹிஸ்புல்லா அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை எங்களின் நடவடிக்கை தொடரும்”, என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *